டிச., மாத இறுதியில் ‘பள்ளிக்கல்வி’ இணையதளம் அறிமுகம்
திருச்சி: கல்வித்துறை நிர்வாக அமைப்பு, பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் முழு விவரம், மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்கள் அடங்கிய ‘பள்ளிக்கல்வி’ என்ற இணையதளம், இம்மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது. நிர்வாக அமைப்பு, இயக்குனர், இணை இயக்குனர்கள் முழு விவரம், மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் எண்ணிக்கை, மாணவ மாணவியர் தனித்தனி எண்ணிக்கை விவரம், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் முழு விவரம், பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து மாவட்டம் வாரியாக தகவல் திரட்டப்பட்டு, இணையதளத்தில் சேர்க்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அப்பணி முடிவடையும் தருவாயில் உள்ளதால், டிச. மாத இறுதியில் பள்ளிக்கல்வி (www.pallikalvi.in) இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த இணையதளம் மூலம், பிற்காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தவும் முடியும். அனிமேஷன் முறையில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்த தேவையான தகவலையும் பதிவு செய்து விட்டால், பள்ளிக்கு வராத மாணவர்கள் தேவையான பாடத்தை ஆன்-லைனில் படித்து தெரிந்து கொள்ளும் வசதி வந்து விடும். இதற்கான அலுவலகம், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கட்டடத்தில் தயாராகி வருகிறது. இணையதள வசதியை உபயோகிக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகக்கும் பிராட் பேண்ட் (அகன்ற அலைவரிசை) வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தித்தர, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிராட்பேண்ட் வசதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர் வழங்கிவிட்டால், பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து தகவல் பரிமாற்றங்களும், அதன் மூலமாக நடக்கும்.