அனைவருக்கும் கல்வி இயக்க முறைகேடு குறித்து ஆய்வு
குஜிலியம்பாறை: அனைவருக்கும் கல்வி இயக்கம்(சர்வ சிக்ஷா அபியான்), சிறப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடு குறித்து ஒன்றிய வாரியாக ஆய்வு நடந்து வருகிறது. அனைவருக்கும் எட்டாம் வகுப்பு வரை கல்வி, பள்ளி இடை நின்றல் மாணவர்களுக்கு கல்வி வழங்குவது போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கான கட்டட வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தில், வேலூர் உட்பட பல இடங்களில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும், உண்டு உறைவிடப் பள்ளியை நடத்தாமலேயே பள்ளி நடத்தியதாக செலவு கணக்கு எழுதுவது, பள்ளியை சீரமைத்ததாக பொய் கணக்கு காட்டுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தமிழக திட்ட இயக்குனர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் ஒன்றியம் வாரியாக ஆய்வுப் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளனவா, ஆசிரியர்களுக்கான பயிற்சி எத்தனை நாட்கள் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை பதிவேடுகளில் ஆய்வு செய்வது மட்டுமின்றி, ‘போட்டோ’ ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.