எம்.பி.ஏ., எம்.சி.ஏ. கலந்தாய்வு: விண்ணப்பம் வினியோகம் விறுவிறு
கோவை: எம்.பி.ஏ., எம்.சி.ஏ. கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு இன்ஜி. கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பதற்கு டேன்செட் நுழைவுத்தேர்வு மட்டுமின்றி, கவுன்சிலிங்கில் பங்கேற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்ப வினியோகம் மாநிலத்திலுள்ள 43 மையங்களில் கடந்த 2ம் தேதி துவங்கியது; கோவையை பொறுத்தவரை, தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, அண்ணா பல்கலையின் கீழுள்ள உறுப்பு கல்லூரிகள், மண்டல மையங்களில் பயிலுவோரும் கோவையில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளனர்.மேலும் பெரியார் பல்கலை, மனோன்மணியம் பல்கலை, சென்னை பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஆகியவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பயில விரும்புபவர்களுக்கும், கவுன்சிலிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இவர்களும் கோவையில் பங்கேற்கவுள்ளனர். விண்ணப்ப வினியோகம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளதால், விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, மாநிலம் முழுவதும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா கூறுகையில், "விண்ணப்பங்களை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஜாதி சான்றிதழ் நகல் சமர்ப்பித்து, 150 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர் 300 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு www.gct.ac.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்" என்றார்.