கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான திறன் வளர்க்கும் போட்டிகள்
திருச்சி: திருச்சி உள்ளிட்ட ஆறு நகரங்களில், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் வளர்க்கும் போட்டிகள் வரும், 28ம் தேதி துவங்குகிறது. ஐ.சி.டி., அகடாமி ஆஃப் தமிழ்நாடு சார்பில், தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில், கல்லூரி மாணவ, மாணவியர்களிடம், திறன் வளர்க்கும் வகையில் தொடர்பு கொள்திறன் மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பங்கேற்கலாம். போட்டிகள் வரும், 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட், 7ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து, மாநில ஐ.சி.டி., அகடாமி துணைத்தலைவர் அன்பு தம்பி கூறியதாவது: திருச்சியில், பேச்சுத்திறன் போட்டிகள் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலும், தொடர்பு கொள்திறன் போட்டி சாராநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் நடக்கிறது. மண்டல அளவில் வெற்றி பெறுகிறவர்கள், கோவையில், ஆகஸ்ட், 13ம் தேதி நடக்கும் இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெறுவர். இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் தலா ஒருவருக்கு, 2014ம் ஆண்டின், இக்ட்ஆக்ட் யூத் ஐகான் விருதும், சிங்கப்பூர் சுற்றுலா வழங்கப்படும். முழுநேர பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பினை, அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படிப்பவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கல்லூரி முதல்வர் ஒப்புதலோடு விண்ணப்பங்களை வரும் ஜூலை, 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 044-42906800 என்ற தொலைப்பேசி எண்ணில் விஷ்ணு பிரசாத் என்பவரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.