வறுமையில் வாடும் தடகள வீரருக்கு உதவ விருப்பமா?
திருப்பூர்: இன்னல் எனும் தடையை தாண்டி, மாநில அளவிலான தடகள போட்டியில், வெற்றியை நிலைநாட்ட, திருப்பூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவன் சுரேஷ்ராஜ் ஆயத்தமாகி வருகிறார். திருப்பூர், பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ், 18. நஞ்சப்பா பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவரது தந்தை சங்கையா, கார்பென்டரர். இளம் வயதில் இருந்தே தடகள போட்டிகளில் பங்கேற்று வரும் சுரேஷ்ராஜ்க்கு, வெற்றி என்பது எட்டும் கனியாகவே இருந்து வந்துள்ளது. பள்ளி கல்வித்துறை இடையேயான தடகள போட்டிகளில், 400 மீ., 800 மீ., ஓட்டப்பந்தய போட்டிகளில் தொடர் வெற்றியை நிலைநாட்டி வருகிறார். அதுமட்டுமின்றி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி வாகையை தக்க வைத்துள்ளார். மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 400 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ள இவர், வரும் 5, 6, 7ல் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார். மாநில போட்டியில் பங்கேற்கும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவன் இவர் ஒருவரே. தடகள போட்டிகளில் அசத்தி வரும் இவர், பல இன்னல்களையும் சந்தித்து வருவது, வேதனையளிக்கும் விஷயம். இவருக்கு தகுந்த கோச் இல்லாததே அதற்கு காரணம். பயிற்சி காலங்களில், ஷூ அணிவதும் கிடையாது. குடும்பத்தின் வறுமை காரணமாக, ஊட்டச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள் பெறுவதிலும், அவருக்கு சிக்கல் நீடிக்கிறது. பயிற்சி காலங்களில் தண்ணீர் மட்டுமே இவரது ஊட்டச்சத்து மிகுந்த பானமாக இருக்கிறது. சுரேஷ்ராஜ் கூறுகையில், "பள்ளிகளுக்கு இடையேயான, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தடகள போட்டிகளில் பல வெற்றிகளை பெற்றுள்ளேன். தற்போது, மாவட்ட தடகள சங்கம் வாயிலாக மாநில அளவிலான 400 மீ., தடகள போட்டியில் பங்கேற்க உள்ளேன். அதில், வெற்றி பெறுவதே என் லட்சியம்" என்றார். வறுமையால், இன்னல்களை சந்தித்தாலும், தடைகளை தாண்டி, தடகள போட்டியில் சாதிக்கும் இவருக்கு ஆதரவு கரம் நீட்ட, 94429 74229 என்ற எண்ணில் அழைக்கலாம்.