உள்ளூர் செய்திகள்

பொதுப்பணித் துறை அலட்சியத்தால் கேள்விக்குள்ளாகும் மாணவர்களின் பாதுகாப்பு

கோவை: சேதமடைந்த பள்ளி கட்டடங்களை மறு சீரமைப்பு செய்ய, பொதுப்பணி துறையிடம் பட்டியல் அளித்தும், எவ்வித முதற்கட்ட பணிகளையும் துவங்காததால், மழைக்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு, கேள்விக்குறியாக வாய்ப்புள்ளதாக, புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில், ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், சுற்றுச்சுவர் விரிசல், பழுதடைந்த பள்ளிக்கட்டட கூரை என, சேதமடைந்த நிலையில் மறு சீரமைப்பு செய்வதற்காக, பல பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க, பொதுப் பணித் துறையின் உதவி நாடப்பட்டது. இதற்காக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், அக்டோபர் மாதத்தில், பொதுப்பணி துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பள்ளிகளின் பட்டியல், சேதமடைந்துள்ள கட்டட விபரங்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், கூட்டம் நடந்து ஆறு மாதங்களாகியும், பொதுப்பணி துறை அதிகாரிகள், எவ்வித முதற்கட்ட பணிகளையும் துவங்காமல், மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு, அரசிடம் இருந்து நிதி வராததே காரணம் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கூட்செட் ரோட்டில் உள்ள, சி.எஸ்.ஐ., பள்ளியின் கட்டட சுவர், இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், இனி இதுபோன்ற விபத்து தொடர அதிகம் வாய்ப்பிருப்பதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சேதமடைந்த பள்ளிக்கட்டம் குறித்த விபரங்கள், பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்து, ஆறு மாதங்களாகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், சேதமடைந்த கட்டடங்கள் இருக்கும் பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்புக்காக மாற்று ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டட மேற்கூரை இருக்கும் பள்ளிகளில், மாற்றுக் கட்டடங்களில் மாணவர்களுக்கு வகுப்பறை நடத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்