உள்ளூர் செய்திகள்

விளையாட்டில் சாதிப்பதையே லட்சியமாகக் கொண்ட திருப்பூர் மாணவர்

திருப்பூர்: ஒவ்வொருவரும் தனித்தனி திறன் கொண்டிருப்பர். எப்போது அந்த திறன் வெளிப்படும் என்பது அவர்களுக்கு தெரியாது. சிலர், தங்களது திறனை முன்னதாகவே கண்டறிந்து முத்திரை பதிப்பர். அவ்வாறு முத்திரை பதித்தவர்களில், திருப்பூர் மாணவன் அருண் பிரபுவும் ஒருவராகியுள்ளார். அருண் பிரபு, கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படிக்கிறார். பொழுதுபோக்கு என குறிப்பிட்டால், குங்பூ விளையாட்டு என்கிறார். இளம் வயதில், குத்துச்சண்டை, குங்பூ, வுசூ, தடகளம் என அனைத்து விளையாட்டுக்களிலும், இவரது ஆர்வம் திசை திரும்பியது. நாளடைவில், விளையாட்டுக்களில் சாதனை என்பதே இவரின் கனவாக மாறியது. விளைவு, 2002ல் சப்-ஜூனியர் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம். 2010ல் கொங்கு மண்டல வுசூ மற்றும் குங்பூ போட்டியில் தங்கப்பதக்கம். அதே ஆண்டு, அகில இந்திய குங்பூ மற்றும் கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம், மீண்டும் இதே ஆண்டில், பைக்கா விளையாட்டில் 400 மீ., தடகள போட்டியில் இரண்டாமிடம், நீளம் தாண்டுதலில் மூன்றாமிடம். 2011ல், மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் என இவரின் சாதனை பட்டியல் நீள்கிறது. தற்போது 2014ம் ஆண்டுக்கான சாதனை ஒன்றையும் இவர் நிகழ்த்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற சர்வதேச  அளவிலான இந்தோ-யூரோ வுசூ போட்டியில் பங்கேற்ற இவர், இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தனக்கு உரிதாக்கிக் கொண்டார். ஒரே நபர் மாறுபட்ட விளையாட்டுகளில் சாதனை படைப்பது அனைவரின் பாராட்டை பெறச்செய்துள்ளது. அருண் பிரபு கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெறுவதே எனது லட்சியம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்