தமிழ் பல்கலையில் ஆயிரம் செம்மரங்கள் நட திட்டம்
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில், கலவை காடுகள் திட்ட அடிப்படையில், முதல் கட்டமாக, ஆயிரம் செம்மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது என, பல்கலையின் துணைவேந்தர் திருமலை தெரிவித்தார். சென்னையில், துணைவேந்தர்கள் மாநாடு, கவர்னர் ரோசய்யா தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி பேசியபோது, தஞ்சை பல்கலையில், ஆயிரம் மரங்கள் கொண்ட கலவை மரக்காடு உருவாக்கப்படுகிறது என்றார். இதுகுறித்து, தஞ்சை தமிழ் பல்கலையின் துணைவேந்தர் திருமலை கூறியதாவது: தஞ்சை தமிழ் பல்கலையில், 800 ஏக்கர் பரப்பளவு உள்ளது; பல்கலை வளாகத்தில், செம்மரம் எனப்படும், செஞ்சந்தன மரம் உட்பட, பல வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் நன்கு முதிர்ச்சியடைந்ததாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பாக வெட்டவும், அதற்கு பதிலாக, பலவகை மரங்கள் நடவும் முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு அரசு உத்தரவை பெற்று, புதிய மரங்கள் நடுவதற்கு, வேளாண்மை பல்கலையுடன் பேசினோம். அப்போது, இங்கு செம்மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு வளர்க்கலாம் என, ஆலோசனை கூறினர். இதையடுத்து, முதல்கட்டமாக, 100 மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3,000 மரங்களை நட்டு வளர்க்க முடிவெடுத்துள்ளோம். இது, அடுத்த 15 ஆண்டுகளில் பல்கலைக்கு அதிகஅளவில் நிதியை பெற்றுத்தரும். இது தவிர, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து, மூலிகைப் பண்ணையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காகித நிறுவனம், தன் தேவைக்கான மரங்களையும் பல்கலையின் இடத்தில் நட்டு, வளர்ப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், பல்கலை வளாகத்தில், நுரையீரல் தொடர்பான நோய்களை தடுக்கும் சக்தி கொண்ட, புரசம் என்ற மரம் ஆங்காங்கே உள்ளது. அருகி வரும் இந்த மரம், தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. இவற்றில் இருந்து நாற்றுக்கள் உருவாக்கி, பல்கலையின் மூலிகை பண்ணையில் வளர்க்கவும், மூலிகைப் பண்ணையில், நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். தஞ்சையில் வளருமா? தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள, ஆந்திராவிற்கு சொந்தமான சேஷாசல வனப்பகுதி மற்றும் ஆந்திர எல்லைகளில் உள்ள தமிழக வனப்பகுதிகளில் மட்டுமே, தற்போது அதிகளவில் செம்மரம் வளர்கிறது. இந்த மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பலால், மரங்கள் அழிந்து வருகின்றன. அதேநேரம், வேறு பகுதிகளில், செம்மரங்கள் வளர்ந்தாலும், அவற்றின் தரம் உயர்ந்ததாக இருப்பதில்லை என, கூறப்படுகிறது. மேலும், அந்த மரங்கள் முதிர்ச்சியடைவதற்கும் நீண்ட காலம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, தஞ்சையில் செம்மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டாலும், அவற்றின் தரம் எவ்வாறு இருக்கும் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கின்றனர் வேளாண் ஆய்வாளர்கள்.