உள்ளூர் செய்திகள்

சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர்களுடையதே: ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்

ஒன்றுக்கொன்று... சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மையத்தில், சிந்துசமவெளி குறியீடுகளை விளக்கும், டிராவிடியன் ப்ரூப் ஆப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா என்ற புத்தகத்தின் வழியாக, ஐராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்: சிந்துசமவெளி முத்திரைகளை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது. அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்து சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துசமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்து சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத்திரைகள் உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்து சமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டை தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம். தொடர்பு அதிகம் முந்தைய இந்திய - ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. சிந்துசமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங்குகிறது. சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டை தமிழ் வார்த்தைகளுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க கால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்