திருமங்கலத்தில் நாளை தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
மதுரை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் எப்படி படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம் என்று மாணவர்களுக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, திருமங்கலம் வி.எஸ்.ஆர். ராமதிலகம் கல்யாண மண்டபத்தில் நாளை (நவ.,29) நடக்கிறது. டி.வி.ஆர்., அகாடமி மற்றும் தினமலர் கல்விமலர் வழங்கும் இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பில் பொதுப் பாடத் திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள், முழு மதிப்பெண்கள் எடுக்க முக்கிய வினாக்கள் எவை, படித்ததை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி, பயமின்றி தேர்வை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். பாடங்கள் வாரியாக நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். பத்தாம் வகுப்பு: பத்தாம் வகுப்பிற்கு காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ஆண்களுக்கு, காலை 11 மணி முதல் 12.30 மணி வரை பெண்களுக்கு என இரு நிகழ்வுகளாக நடக்கின்றன. இதில் ஆங்கிலப் பாடம் குறித்து மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆதிஞானக்குமரன், கணிதம் குறித்து வேடர்புளியங்குளம் அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை, அறிவியல் பாடம் குறித்து சென்னை தாசில்தார் பாலாஜி பேசுகின்றனர். பிளஸ் 2: பிளஸ் 2 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. ஆங்கிலம் பாடம் குறித்து மதுரை ஏ.சி., மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜெயசந்திரன், கணிதம் குறித்து சென்னை தாசில்தார் பாலாஜி, இயற்பியல் குறித்து திருநகர் பாம்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் காளிமுத்து, வேதியியல் குறித்து திருமங்கலம் பி.கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் குருவம்மாள், தன்னம்பிக்கை குறித்து மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்களின் சாப்ட் ஸ்கில் பயிற்சியாளர் ஜஸ்டின் சகாயராஜ் பேசுகின்றனர். நிகழ்ச்சியை திருமங்கலம் பி.கே.என்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, திருமங்கலம் தனலட்சுமி ஜவுளி ஸ்டோர், மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள், பூர்விகா மொபைல் வோல்டு இணைந்து வழங்குகின்றன. மாணவர்களே வாருங்கள், அனுமதி இலவசம்.