அழியும் மொழிகளை காக்க திட்டம்: ஸ்மிருதி இரானி
புதுடில்லி: அழியும் நிலையில் உள்ள மொழிகளையும், பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழிகளையும் காக்க, தேசிய மொழிபெயர்ப்பு திட்டம் (என்.டி.எம்.,) என்ற அமைப்பை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மேலும் கூறியதாவது: அழியும் நிலையில் உள்ள, 70 மொழிகளை காக்க, என்.டி.எம்., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது, அறிவுசார் நூல்களை, அரசியல் சாசனத்தின், 8வது அட்டவணையில் உள்ள அனைத்து இந்திய மொழிகளிலும், மொழிபெயர்க்கும் பணியினை மேற்கொள்ளும். மைசூரில் உள்ள, இந்திய மொழிகளுக்கான மத்திய பயிலகத்தில், என்.டி.எம்., இயங்கும். இந்த அமைப்பு, பல்வேறு நூல்களை, இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்த தகவலை பரப்புதல், மொழிபெயர்ப்பு மூலம், இந்திய மொழிகளில் உயர் தரமான, அறிவுசார் நூல்களின் தொகுப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இத்துடன், மொழிபெயர்ப்புக்கு உதவும் அகராதி, நிகண்டு உள்ளிட்டவற்றையும் உருவாக்கும். இந்த அமைப்பின் ’தேசிய பேராசிரியர்’ ஆக, இலக்கிய உலகில் அருஞ்சேவையாற்றிய, மொழியியல் வல்லுனர் பேராசிரியர் எஸ்.எல்.பைரப்பா நியமிக்கப்பட உள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.