முறையான தகவல் பரிமாற்றமில்லாமல் நடந்த விளையாட்டுப் போட்டிகள்
காரைக்குடி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தால் தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில், பல்வேறு பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்காததால் குறைந்த அளவு மாணவர்களே பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தால், தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான ஜூனியர் பிரிவினருக்கான 100, 200, 400, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டி அழகப்பா உடற் கல்வியியல் கல்லூரியில் நடந்தது. 25 பள்ளிகள் பங்கேற்றன. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சீருடையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர். உடற்கல்விஆசிரியர் ஒருவர் கூறும்போது: தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில், காரைக்குடி, திருப்புத்தூர், எஸ்.புதூர், சிங்கம் புணரி, கல்லல், சாக்கோட்டை பகுதியில் 460-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. ஆனால், 25 பள்ளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளன. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலிருந்து நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்க, தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலைப்பள்ளி மட்டுமின்றி பல்வேறு பள்ளிகளுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. ஒரே நேரத்தில் மூன்று போட்டி நடக்கிறது. ஒலி பெருக்கி வசதி இல்லாததால், எந்தெந்த மாணவர் களை எங்கு செல்ல சொல்வது என்பது தெரியவில்லை. பள்ளிகளில் நடக்கும் போட்டிக்கு கூட ஒலிபெருக்கி வசதி செய்து கொடுக்கிறோம். முதல், இரண்டு, மூன்றாம் இடம் பெற்றவர்கள் விபரங்களை, அறிவிக்காமல் பரிசு வழங்கும் நேரம் அறிவித்ததால், தாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்த பல மாணவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். வருங்காலங்களிலாவது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டை ஊக்கப்படுத்த முயற்சி செய்யுமா? என்பது அனைத்து அரசு பள்ளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் கூறும்போது: உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் போட்டி இது. ஒவ்வொரு பள்ளிகள் அளவிலும் ஏற்கனவே பருவ அளவிலான போட்டி வைக்கப்பட்டு, அதில் தேர்வான மாணவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. அந்த மாணவர்களின் விபரம் அனுப்பிய பள்ளிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து, இந்த போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. குறைசொல்ல வேண்டும் என்றால், எல்லாவற்றையும் சொல்லலாம். அடுத்த முறை வேண்டுமானால் தொடக்கக் கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும், என்றார்.