உள்ளூர் செய்திகள்

குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் மாணவர் சேர்க்கை அனுமதியில்லை: எம்.சி.ஐ.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் காணப்படும் குறைபாடுகளை மூன்று மாதத்திற்குள் சரி செய்யாவிட்டால், புதிதாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர முடியாது என, இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ., கெடு விதித்துள்ளது. போக்குவரத்து நிறுவனம் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், தமிழக அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம், மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறது. 35 சதவீதம் போக்குவரத்து ஊழியர் குழந்தைகளுக்கும், 65 சதவீதம் அரசு ஒதுக்கீடு என, ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 60 பேர் சேர்க்கப்படுகின்றனர். கடந்த, 25 ஆண்டுகளாக செயல்படும் இந்த கல்லூரியில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. காலத்திற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும் என, எட்டு ஆண்டுகளுக்கு முன், எம்.சி.ஐ., எச்சரித்தும், இன்னும் போதிய வசதிகள் செய்யப்படாமல், ஆதிகால கல்லூரியாகவே செயல்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன், எம்.சி.ஐ., குழு, கல்லூரியில் திடீர் ஆய்வு நடத்தி, அறிக்கையை சமர்பித்தது. கடந்த மாதத்தில் கூடிய எம்.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில், இந்த ஆய்வறிக்கை விவாதிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தும், கல்லூரிக்கு தேவையான வசதிகளை இன்னும் செய்யவில்லை என, அதிருப்தி தெரிவித்த எம்.சி.ஐ., தேவையான பேராசிரியர்கள் இல்லை; ஆடிட்டோரியம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என, 18 குறைகளை சுட்டிக் காட்டி உள்ளது. அனுமதி தர முடியாது மூன்று மாதத்திற்குள், குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்; இல்லாவிட்டால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர முடியாது எனவும் எச்சரித்துள்ளது. போக்குவரத்து துறையும், அரசும் தொடர்ந்து அலட்சியம் காட்டியதால், தற்போது சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்குள் அனைத்து வசதிகளையும் செய்து முடிப்பது சாத்தியமில்லை என்றாலும், அதற்கான பணிகளைத் துவங்கி, மாநில அரசு சிறப்புக்கவனம் செலுத்தினால் மட்டுமே, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சாத்தியமாகும். இதுதான் தீர்வு? எம்.சி.ஐ., எச்சரித்து, எட்டு ஆண்டுகள் ஆகியும், தேவைக்கேற்ப பேராசிரியர்கள் நியமித்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தாதது வருத்தம் அளிக்கிறது. எம்.சி.ஐ., தெரிவித்துள்ள குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்வதே சிக்கலுக்கு தீர்வாகும். இதில், உடனடியாக மாநில அரசு சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். ரவீந்திரநாத், பொதுச்செயலர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்