சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ள குழந்தைகள் நல மையம்
பல்லடம்: சாமளாபுரத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தை சுற்றி குப்பையும், கழிவுகளும் கொட்டப்படுவதால், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பல்லடம் அடுத்த சாமளாபுரத்தில், குழந்தைகள் மையம் செயல்படுகிறது; இம்மையத்தை சுற்றிலும், குப்பையும், கட்டட கழிவுகளும் கொட்டப்படுகின்றன. கடும் துர்நாற்றம் வீசுகிறது; கொசுக்களும் பெருகியுள்ளன. சுகாதாரக்கேடு நிலவும் சூழ்நிலையில், குழந்தைகள் நல மையம் செயல்படுகிறது. இதேநிலை பல நாட்களாக நீடிப்பதால், குழந்தைகளை மையத்துக்கு அனுப்ப, பெற்றோர் தயங்குகின்றனர். குப்பை அகற்றுவதில், பேரூராட்சி நிர்வாகம் மெத்தமனமாக உள்ளதாக, குற்றம் சாட்டுகின்றனர். டெங்கு, மர்மக் காய்ச்சல் அபாயம் நிலவி வரும் சூழ்நிலையிலும், குழந்தைகள் மையத்தைச் சுற்றியுள்ள குப்பையை அகற்றுவதில், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, பெற்றோர் வேதனையுடன் கூறுகின்றனர். குப்பையை அகற்றி, சுகாதாரப்பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.