உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியர்களுக்கு பண்பு வளர் பயிற்சி முகாம்

திருப்பூர்: திருப்பூரில் நான்கு பேர் உட்பட, தமிழகம் முழுவதும், 400 தலைமை ஆசிரியர்களுக்கு, தலைமை பண்பு வளர் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைமை பண்பு வளர் பயிற்சி, சென்னையில் அளிக்கப்படுகிறது. கல்வி தரத்தை மேம்படுத்துதல், பள்ளிகளை மேம்படுத்த தொலைநோக்கு திட்டம், தலைமை பண்பு வளர்த்தல், நேரம் மற்றும் வள மேலாண்மை, புதுமையான விஷயங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில், இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து, துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு நான்கு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, 400 பேருக்கு, தலைமை பண்பு வளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தங்களது மாவட்டத்தில் இப்பயிற்சி பெற தகுதியான நான்கு ஆசிரியர்களை தேர்வு செய்து, அனுப்பி வைக்கவும், அவர்களின் விவரங்களை, புரொபைல் ஆக தயார் செய்து அனுப்பவும், உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பப்படுவோரில் இருந்து கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், பணி அனுபவம், தகுதி, திறமை, புதுமையான முயற்சிகளை முழுமையாக ஆய்வு செய்து, தனிக்கவனம் செலுத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, பணியில் அனுபவம் வாய்ந்த துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த நான்கு தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல், முழு விவரத்துடன் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்