உள்ளூர் செய்திகள்

மாணவருக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம் துவங்கியது

திருப்பூர்: மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஆதார் பதிவு சிறப்பு முகாம், துவங்கியது. வரும் டிச., மாதத்துக்குள் ஆதார் பதிவு பணிகளை முடிக்க வேண்டும் என, அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் சிறப்புமுகாம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, மாணவ, மாணவியர் நலன் கருதி, பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் பதிவு பணிகள், மாவட்ட அளவில், 44 உபகரணங்களை பயன்படுத்தி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவுபடுத்த வசதியாக, கூடுதலாக, 30 செட் வரவழைக்கப்பட்டு, பணியாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கான ஆதார் சிறப்பு முகாம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று துவங்கியது. கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ஆதார் எண் என்பது, அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதை, தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். ஆர்.டி.ஓ., முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் முருகன், தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டோர், சிறப்பு முகாம் குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கினர். ஆதார் பொறுப்பு அதிகாரிகள் கூறியதாவது: மாணவர் பெயர், வயது, பிறந்த தேதி, பெற்றோர் பெயர், அவர்களது மொபைல் எண், முகவரி, உள்ளிட்ட விவரங்களை பெற, பிரத்யேகமாக படிவம் வழங்கப்பட்டுள்ளது. படிவத்தை, வகுப்பு ஆசிரியர் பூர்த்தி செய்து, மாணவர்களும், ஆசிரியர்களும் கையொப்பமிட்டு வழங்குவர். அதனை பெற்று பதிவு செய்யப்படும். மாவட்டம் முழுவதும், ஆசிரியர்கள் மூலமாக படிவம் பூர்த்தி செய்து பெறப்பட உள்ளது. அதன்படி, விடுபட்ட மாணவர் மற்றும் மாணவியர் எண்ணிக்கை தெரியவரும். அதன்பின், பள்ளி மற்றும் கல்லூரி வாரியாக முகாம் நடத்தும் தேதி பட்டியலிடப்பட்டு, பணிகள் நடக்கும். முதல் கட்டமாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்னுரிமை தரப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்