ஆசிரியை, மாணவன் கொலை சுவீடன் பள்ளியில் பயங்கரம்
டிரால்ஹாட்டன்: ஐரோப்பாவின் வடக்கு பகுதியில் உள்ள, சுவீடன் நாட்டில், பள்ளியில் புகுந்த மர்ம மனிதன் கத்தியால் குத்தியதில், ஆசிரியை, மாணவன் உயிரிழந்தனர். முகமூடி அணிந்த மர்ம நபர், பள்ளியின் வகுப்பறைக்குள் கத்தியுடன் புகுந்து, திடீரென ஒரு ஆசிரியை மீது பாய்ந்து, கத்தியால் சரமாரியாக குத்தினான்; அதைப் பார்த்த மாணவர்கள், அலறி அடித்து ஓடினர். அடுத்து, ஒவ்வொரு வகுப்பறையாக சென்ற அவன், மேலும் ஒரு ஆசிரியை வயிற்றில், கத்தியால் குத்தினான். தடுக்க முயன்ற, இரு மாணவர்களையும் தாக்கினான். தகவலறிந்து வந்த போலீசார், மர்ம மனிதனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொலையாளி, 20 வயது இளைஞன். அவன் கத்தியால் குத்தியதில், ஆசிரியையும், மாணவனும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு ஆசிரியை, மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.