உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் நேரத்தை சுரண்டும் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: தேர்விற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி என்ற பெயரில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, பள்ளி மாணவர்களின் நேரம் சுரண்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன; குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கின; சாலைகள் சேதமடைந்தன. நவம்பர் மாதத்திலிருந்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சற்று மழை ஓய்ந்ததால், கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரும் என்பதால், அவர்களுக்கு சிறப்பு உளவியல் ஆலோசனைகளை அரசு வழங்கி வருகிறது. இதையடுத்து, பள்ளிகளை கூடுதல் நேரம் இயங்குவதற்கும்; அரையாண்டு தேர்வை நடத்துவதற்கும், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த இரு நாட்களாக, அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., - எம்.பி., உள்ளிட்டவர்களை அழைப்பதால், கட்சிக்காரர்கள் பள்ளிகளில் குவிகின்றனர். இதனால், பள்ளிகளில் அமைதி நிலை குலைந்துள்ளது. பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் ஆசிரியர்களும்; விரைவாக அனைத்து பாடங்களையும் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாணவர்களும் இருக்கும் நிலையில், பள்ளிகளில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, இரண்டு மணி முதல், மூன்று மணி நேரம் வரை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அரையாண்டு தேர்வுக்கு குறைவான நாட்கள் உள்ள நிலையில், பள்ளி நேரத்தை, லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி சுரண்டுவதாக, மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களின் நேரத்தை வீணடிக்காத வகையில், நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்