டெங்கு கொசு ஒழிப்பு மாணவர் மூலம் பிரசாரம்
திருப்பூர்: டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம், வீதி வீதியாக விழிப்புணர்வு பிரசாரத்தை, அதிகாரிகள் துவக்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில், கடந்தாண்டு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. மாநகராட்சியில், கொசுப்புழு உற்பத்தியை தடுக்க பகீரத முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளில், அதன் பாதிப்பு நீடித்தது. ஏனெனில், ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம், மாதம் இருமுறை மட்டும் நடப்பதால், தண்ணீரை பேரல்களில் இருப்பு வைக்கின்றனர். தேக்கப்படும் தண்ணீரில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இப்பாதிப்பு தற்போது குறைந்திருந்தாலும், கொசு உற்பத்தியை தடுப்பது, சவாலாக உள்ளது. கோடை காலத்தில், கொசு உற்பத்தி குறைந்திருந்தாலும், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைப்பதால், கொசுக்கள் உற்பத்தியாவதை குறைக்க முடிவதில்லை. அதனால், நல்ல தண்ணீரில் கொசு உற்பத்தியாகி, டெங்கு நோய் பரப்புவது குறித்து விழிப்புணர்வு செய்ய, தன்னார்வலர்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் கூறுகையில், வீடுகளில் சேமித்து வைத்திருக்கும் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுவால், ஆபத்து அதிகம். கோடையில் கொசு ஒழிப்பை வெற்றிகரமாக செய்து விட்டால், அடுத்து வரும் நாட்களில் டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரை, தன்னார்வலர்களாக இணைத்து, வீதி வாரியாக கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது, என்றார்