உள்ளூர் செய்திகள்

வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்: மத்திய அரசு முடிவு

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில், இம் முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக, மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். இதன் மூலம் வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்கள் எங்கு படிக்கின்றனர், எங்கே தங்கியுள்ளனர் என்ற அனைத்து விவரங்களையும் உடனடியாக அறிய முடியும். ஏதாவது அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தூதரகங்கள் மேல் நடவடிக்கை எடுக்க இத்தகவல் தொகுப்பு உதவிடும். வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி இது குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் 97 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 18 மாதங்களாக இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் வகையில், அங்கு சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி ஆஸ்திரேலிய அரசை கேட்டுள்ளோம். வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களை பற்றிய விவரங்கள் அரசிடம் இல்லை. ஏதாவது ஒரு விவகாரம் என்றால் மாணவர்களை பற்றிய தகவலை விமான நிலையத்தின் மூலமாக தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. எந்த நகரில் மாணவர் இருக்கிறார், எங்கு வசிக்கிறார், எந்த கல்லூரியில் படிக்கிறார், அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்பது போன்ற தகவல்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மாணவர் நலனை பாதுகாக்க வழி ஏற்படும். இதற்கான தகவல் தொகுப்பு ஏற்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சகத்துடனும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துடனும் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். தகவல் தொகுப்பை உருவாக்குவதன் மூலம் எவ்வளவு மாணவர்கள் வெளிநாடு செல்கிறார்கள், எங்கு, என்ன படிக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரியவரும். வெளிநாடு செல்லும் மாணவர்கள் அரசுக்கு தகவல் அளிக்கும் படி பிரசாரம் செய்ய உள்ளோம். இமெயில் மூலமாவது இந்த தகவலை எங்களுக்கு அளிக்க வேண்டும். விசா வழங்கும் தூதரகங்கள், விமான நிலையங்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்களில் பயணிகளை பற்றி கூடுதல் விவரங்களை சேகரிக்கும்படி வற்புறுத்தப்படும். ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றிய தகவல்களை அளிக்கும் படி அந்நாட்டு அரசிடமும் கேட்டுள்ளோம். இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசா குறித்த விவரங்களை அளிக்க ஆஸ்திரேலிய கல்வித் துறை ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வாறு வயலார் ரவி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்