வினாத்தாள் அமைப்பில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தல்
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், வரைவு பாடத்திட்டம் தயாரிப்பது குறித்த கருத்தரங்கம், சென்னையில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துறைச் செயலர் குற்றாலிங்கம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு, பொதுப் பாடத்திட்டம் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் உதயசந்திரன் பேசியதாவது: என்.சி.இ.ஆர்.டி., வடிவமைக்கும் பாடப் புத்தகங்களில் உள்ளதைப் போல், ஒரு பாடத்திற்கு தொடர்பான புகைப்படங்கள், சிறு குறிப்புகள் மற்றும் இணைய தள முகவரிகள் போன்ற சிறப்பம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் எடுக்கும் கல்வி முறையை மாற்ற வேண்டும். இதற்கு, பள்ளி தேர்வுகளுக்கான வினாக்கள் தயாரிப்பதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இதுவே சமச்சீர் கல்வியின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். இவ்வாறு உதயசந்திரன் பேசினார். சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு பேசுகையில், ஒரு பாடத்தின் 30 சதவீதத்தை வகுப்பறையில் ஆசிரியர் கற்றுத் தர வேண்டும். குழு விவாதத்தின் மூலம் 40 சதவீதத்தை மாணவர்கள் கற்கும் படியும், மீதமுள்ள 30 சதவீத பாடத்தை மாணவர்கள் சுயமாக படிக்கும் விதத்திலும் பொதுப் பாடத்திட்டம் இருக்க வேண்டும். அறிவியல் பாடங்களில் வரும் விதிகளோடு, அவ்விதிகளை உருவாக்கிய அறிஞர்கள் பற்றிய குறிப்பை கொடுத்து படிப்பதை, மாணவர்கள் சுவையான அனுபவமாக உணரும்படி செய்ய வேண்டும் என்றார்.