அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கடலுாரில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. மாவட்டத்தில் விவாயம், விவசாயம் சார்ந்த தொழிலையே நம்பியுள்ள ஏழை, எளிய மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். நோய்வாய் பட்டால், 70 சதவீத மக்கள் அரசு மருத்துவமனைகளையே நாடிச் செல்லும் சூழல் உள்ளது.கடலுார் அரசு மருத்துவமனை 1907ம் ஆண்டு துவங்கப்பட்டு, 114 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் உள்ளன. தினசரி 3,500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 700க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக உள்ளனர். மகப்பேறு மருத்துவமனையில் தினசரி 25 குழந்தைகள் வரை பிறக்கின்றன. இம்மருத்துவ மனையில் நரம்பியல் சிறப்பு மருத்துவர், இருதய சிறப்பு மருத்துவர் இல்லை. விபத்தில் காயமடைந்தவர்கள், எலும்பு முறிவு, பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு சாதாரண அறுவை சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகின்றன.தலையில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய வசதியின்றி புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம், சென்னை மருத்துவ மனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால், கால விரயம் ஏற்படுவதுடன், வாகனங்களில் கொண்டு செல்லும் போது உயிரிழப்பும் ஏற்படுகிறது. சிறைக் கைதிகளை மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும்.சந்தேக மரணங்களுக்கு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. வெளி மாவட்ட, மாநில மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகளுக்கு செல்லும் கடலுார் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் அலைகழிக்கின்றனர்.இது போன்று பல காரணங்களால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி துவங்க வேண்டும் என, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து, கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி, எம்.புதுார் கிராமத்தில் 116 ஏக்கர் பரப்பளவில் அரசு காசநோய் மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த வளாகத்தில் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, தி.மு.க., ஆட்சியின் போது, ரூ. 100 கோடி மதிப்பில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடலுாரில் மருத்துவக் கல்லுாரி துவக்கினால், சுற்று வட்டாரப் பகுதிகள் வளர்ச்சி அடையும். டாக்டருக்கு படிக்க வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்ல தேவையில்லை. இனி உயர் சிகிச்சைக்கு, புதுச்சேரி, சென்னை என அலைய வேண்டியதில்லை என மாவட்ட மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடிக்கல் நாட்டியதோடு 10 ஆண்டுகளாகியும் பணி கிடப்பில் போடப்பட்டதால், மருத்துவர்கள் மட்டுமின்றி மாவட்ட மக்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை துவங்க அனைத்து சூழல்களும் உள்ளன.மாவட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையை காரணம் காட்டி, கடலுாரில் அரசு மருத்துவக் கல்லுாரி துவங்க முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உயர் சிகிச்சைகளுக்கு புதுச்சேரி, சென்னை என நோயாளிகளை அலைய வைப்பது தொடர் கதையாக உள்ளது. எனவே, கடலுாரில் அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியிலேயே அரசு மருத்துவக் கல்லுாரி துவங்க, மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.