மாணவர்களுக்கு கடிதம் எழுதி நலம் விசாரித்த ஆசிரியை
பெங்களூரு: கொரோனா பீதியால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான தொடர்பு அறுந்துள்ள நிலையில், ஆசிரியை ஒருவர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடிதம் எழுதி நலம் விசாரித்துள்ளார்.கர்நாடகாவை ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கொரோனா வாட்டி வதைக்கிறது. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான தொடர்பு அறுந்துள்ளது. இதை இணைக்கும் முயற்சியில் ஆசிரியை ஒருவர் ஈடுபட்டுள்ளார். சிக்கமகளூரு நகர் எலகுடிகே கிராமத்தின் அரசு தொடக்க பள்ளியில் பணியாற்றுபவர் கீதா. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆசிரியை கீதா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நலம் விசாரித்ததுடன் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறார். அவர்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தை பற்றியும் கேட்டறிந்தார்.மாணவர்களின் கல்வி பற்றியும் கேட்டறிந்தார். கடிதம் கண்டு மகிழ்ச்சியடைந்த பெற்றோர், ஆசிரியையை மொபைலில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளனர். தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் சமீபத்தில் சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.அப்போது அவர், &'பள்ளிகள் மூடியுள்ளதால், மாணவர்களின் தன்னம்பிக்கை குறைந்துள்ளது. அவர்களுக்கு கடிதம் எழுதி, தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். &'பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியில், அக்கறை காண்பிக்க வேண்டும்&' என உத்தரவிட்டிருந்தார். இதன்படி, ஆசிரியை கீதா தன் பள்ளியின் 16 மாணவர்களுக்கு கடிதம் எழுதி மற்ற ஆசிரியர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.