உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் ஜெயித்துக் காட்ட முடியும்

தினமலர் நாளிதழ், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., மற்றும் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்வதற்கு உதவும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி நூற்றாண்டு விழா மண்டபத்தில் துவங்கியது  நிகழ்ச்சியில் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் பேராசிரியர் ராமசாமி வரவேற்று பேசியதாவது:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், தமிழகம் முழுவதும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதன்மூலம், நகரப் பகுதி மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுகின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்வாக முடியும், என்றார்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் பேசியதாவது:மாணவர்களிடம், பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்கின்றனர். அந்த எதிர்பார்பை மாணவர்கள்தான் பூர்த்தி செய்ய வேண்டும். பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.போட்டி நிறைந்த உலகில் பயணித்து வருகிறோம். இதில், கல்வி முக்கியமாக உள்ளது. நாடு முன்னேறினாலும், இன்னும் பலவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அத்தகைய மாற்றம் இளைஞர்கள் மூலம் தான் கொண்டு வர முடியும். இவ்வாறு, மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் பேசினார்.அதிகாலையில் திரண்ட மாணவர்கள்: ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுப்பகுதியிலுள்ள குக்கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவ மாணவிகள் நேற்று காலை 7.30 மணி முதலே மாணவர்கள் வரத் துவங்கினர். சரியாக காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.பத்தாம் வகுப்பு அரசு பாடத்திட்டத்தில், தமிழ் பாடத்திற்கு சமத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சர்க்கரையம்மாள், ஆங்கிலம் பாடத்திற்கு சமத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரியா, கணிதம் பாடத்திற்கு ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்வடிவு, அறிவியல் பாடத்திற்கு சமத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தர்மராஜ், சமூக அறிவியல் பாடத்திற்கு ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மேரிபுஷ்பம் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.திரண்டிருந்த மாணவ மாணவிகள் அமைதியுடனும் ஆர்வத்துடனும் குறிப்பெடுத்தனர். மதியம், பத்தாம்வகுப்பு மெட்ரிக் மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழ் பாடத்திற்கு எல்.எம்.எஸ்., பள்ளி ஆசிரியர் மணிமேகலை, ஆங்கிலம் பாடத்திற்கு பி.கே.டி., பள்ளி ஆசிரியர் உமா,கணிதம் பாடத்திற்கு ஏ.எம்.எஸ்., பள்ளி ஆசிரியர் மகாதேவன், இயற்பியல் பாடத்திற்கு எல்.எம்.எஸ்., பள்ளி ஆசிரியர் ராஜசேகர்.வேதியியல் பாடத்திற்கு ஏ.எம்.எஸ்., பள்ளி ஆசிரியர் ஸ்ரீதா, உயிரியல் பாடத்திற்கு எல்.எம்.எஸ்., பள்ளி ஆசிரியர் வசந்தராணி, சமூக அறிவியல் பாடத்திற்கு ஏ.எம்.எஸ்., பள்ளி ஆசிரியர் கலாவதி ஆலோசனை வழங்கினர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு, இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய தன்னம்பிக்கை குறித்த ஜெயித்துக்காட்டுவோம் புத்தகமும், முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகமும், பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கும்புளூபிரின்ட் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்