இளம் விஞ்ஞானி மாநாட்டில் மாணவர் பங்கேற்க வாய்ப்பு
நாமக்கல்: தேசிய அளவிலான இளம் விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவியருக்கு வாயப்பு ஏற்பட்டுள்ளது என, மாவட்ட ஜவகர் பாலபவன் திட்ட இயக்குனர் தில்லைசிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஐந்து தினங்கள் 12 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் நாம் வாழும் பகுதியின் நிலைத்த தன்மை&' கிராமம், நகரம், மாநகரம் பற்றி ஆய்வும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையில் உள்ளதா, சுற்றுச்சூழல் பிரச்னைகளை எப்படி சீர்செய்வது, அதற்கான வழிமுறை என்பது குறித்த ஆய்வறிக்கையை போட்டோவுடன் வழங்க வேண்டும். அந்த அறிக்கை உண்மையானதாக இருக்க வேண்டும். நாம் வாழும் வாழ்விடங்களில் நிலம், நீர், காற்று எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது, இயற்கை வளங்கள் எப்படி பாதிக்கப் பட்டுள்ளன, குறிப்பாக பறவை, நீர் வாழ் உயிரினம் எந்த அளவு அழிந்து போய் உள்ளன என்பதை உள்ளடக்கியதாக ஆய்வறிக்கை அமைய வேண்டும். அந்த அறிக்கையை வரும் 20ம் தேதி நாமக்கல் மாவட்ட ஜவகர் பாலபவன், எல்.ஐ.சி., பின்புறம் உள்ள அலுவலகத்தில் வழங்க வேண்டும். தேர்வு செய்யப்படும் இருநபர்கள் இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநாட்டில் பங்கேற்க செல்லும் மாணவ, மாணவியருக்கான போக்குவரத்து தங்குமிடம், உணவு என அனைத்தையும் அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.