உள்ளூர் செய்திகள்

மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகங்களே... ஒரு நிமிடம்!

சமீபத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன், வேதாரண்யம் அருகே குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது; பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பலியாயினர். இவ்விபத்துக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும், போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படாததும் காரணம் என ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ.,) அலுவலகம் சார்பில், பள்ளி நிர்வாகங்களுக்கு சில வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை; பெற்றோர், ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை; பள்ளி நிர்வாகம் கடைபிடிக்க வேண்டியவை என தனித்தனியாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் போக்குவரத்து விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி நிர்வாகங்களுக்கு இப்பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வழிமுறைகள்: பெற்றோர், சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளையும், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காமல் தனியே அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள், பெற்றோர் சாலைகளில் கடைபிடிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டே, சாலை பாதுகாப்பு குறித்த அறிவை பெறுகின்றனர் என்பதால், பெற்றோர் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது, சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் போது, நடைபாதையில் மட்டுமே செல்ல வேண்டும். நடைபாதை இல்லாவிட்டால், சாலைகளில் ஓரமாக நடந்து செல்ல வேண்டும். சாலைகளில் எவ்வித பதட்டத்துடன் செல்லாதீர்கள். வேகமாக செல்வதும், ஓடுவதும் கூடாது. சாலைகளை கடப்பதற்கு என குறிக்கப்பட்ட கறுப்பு, வெள்ளை கட்டமிட்ட இடங்கள், நடைமேம்பாலங்கள், போக்குவரத்து சிக்னல்கள் போன்ற இடங்களில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும். சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை கடந்து சாலைக்கு செல்லும்போது, சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாமல் போகலாம். ஏனெனில், நிறுத்தப்பட்டுள்ள வாகனம் நமது உயரத்தை விட அதிகமாக இருக்கலாம். எனவே, கவனமுடன் கடக்க வேண்டும். அகலமான சாலையின் மையத்தில் தீவுத்திடல் இருந்தால், இரண்டு பகுதிகளாக கடக்க வேணடும். ஒரு பகுதியை முதலில் கடந்தபின், நின்று, அடுத்த பகுதியில் வாகனம் எதுவும் செல்லாததை, உறுதி செய்து கடக்க வேண்டும். ஒரு வழிப்பாதையை கடக்கும் போது, வாகன வகைக்கேற்ப ஒதுக்கப்பட்ட அனைத்து வழிகளிலும் வாகனம் செல்லாமல் இருக்கும் போதே கடக்க வேண்டும். திருப்பங்களிலோ, வளைவுகளிலோ ஒரு போதும் சாலையை கடக்க கூடாது. ஏனெனில், நீங்கள் சாலைகளை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்க்க இயலாது. சாலையை ஓடிக்கடக்க முயற்சிப்பது தவறானது. தவறி கீழே விழ வாய்ப்புள்ளதால், அபாயத்தை விளைவிக்கும். பள்ளி வாகனத்தில் செல்லும் போது: வீட்டை விட்டு புறப்படும் போது, சற்று முன்னதாகவே புறப்படுங்கள். பள்ளி வாகனத்தில் ஏற அவசரப்பட தேவையில்லை. பஸ் ஸ்டாப்களில் வரிசையில் நிற்க வேண்டும். பஸ் நின்ற பின், ஒருவர் பின் ஒருவராக ஏறுங்கள். பஸ்சில் செல்லும் போது, சப்தமிடுவதோ, கூக்குரலிடுவதோ கூடாது. அது, டிரைவரின் கவனத்தை சிதறடிக்கும். பள்ளி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்ட நிறுத்தங்கள் தவிர, பிற இடங்களில் பஸ் ஏறுவதோ, இறங்குவதோ கூடாது. சிக்னலில் வாகனம் நிற்கும் போது, ஏறவோ, இறங்கவோ கூடாது. பஸ்களில் பயணிக்கையில், திருப்பங்களின் போது கைப்பிடியை பிடித்து பயணிக்க வேண்டும். பஸ்களின் படிக்கட்டில் உட்கார்ந்தோ, நின்று கொண்டோ பயணிக்க கூடாது. பஸ்சுக்கு வெளியே கை, கால், தலையை நீட்டக்கூடாது. பஸ் ஓட்டும் போது டிரைவர் மொபைல் போன் உபயோகிக்கக்கூடாது. பெற்றோர் கவனத்துக்கு: பள்ளிகளால் வழங்கப்படும் போக்குவரத்து வசதி பாதுகாப்பானதா என, பெற்றோர் கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை மீறுகிறதா என கண்காணிக்க வேண்டும். அவ்வாறு நடந்தால், போக்குவரத்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று, தங்களது குழந்தைகளின் பாதுகாப்பாக பயணத்தை அறிவுறுத்த வேண்டும். தங்களுடன் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கற்றுத்தர வேண்டும். தங்கள் குழந்தைகள் உரிய வயதை எட்டாத போது, வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக்கூடாது. பெற்றோர், போக்குவரத்து விதியை மதித்தால்தான், குழந்தைகளும் மதித்து, கடைபிடிப்பர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கடைபிடிக்க வேண்டியவை: சாலைகளை பயன்படுத்தும் போது, பொறுப்பாக இருக்க வேண்டிய மனநிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். சாலைவிதிகளை நன்கு அறியச் செய்வதோடு, முக்கியத்துவத்தையும் உணரச் செய்ய வேண்டும். விபத்துகளில் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படும் போது, அதற்கான காரணத்தை விவரித்து சொல்ல வேண்டும். பள்ளிக்குள் நுழையும் போதும், பள்ளி விட்டு செல்லும் போதும் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும். பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் நிறுத்தும் போது பாதுகாப்பாகவும், முறையாகவும் நிறுத்த வேண்டும். குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் கவனிக்க வேண்டும். பஸ் டிரைவர் மற்றும் குழந்தைகளை கட்டுப்படுத்த ஒரு ஆசிரியர் கண்டிப்பாக பஸ்சில் பயணிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றக் கூடாது. பள்ளி ஆரம்பிக்கும் முன்பும், விட்டுச் செல்லும் போதும், குறிப்பிட்ட நேரம் பள்ளி முன், பணியாளர் ஒருவரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். பஸ் பழுது மற்றும் வேறு காரணங்களுக்காக, வழியில் நிறுத்தப்படும் போது, குழந்தைளை ஒரே இடத்தில் குழுவாக நிறுத்தி பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் அனுப்ப வேண்டும். கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை, பள்ளி வாகனம் கடைபிடிக்கிறதா என, அடிக்கடி சோதனையிட வேண்டும். வேறு எந்த பள்ளி வாகனமும், பள்ளி குழந்தைகளுடன் செல்லும் போது, விதிகளை மீறி இயக்கப்பட்டால், அந்த பள்ளி முதல்வருக்கோ, போக்குவரத்து காவல் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட விதிகள்: பள்ளி வாகனம் என, வாகனத்தின் முன், பின் இருபுறமும் எழுத வேண்டும். வாகனத்தின் முன்னும், பின்னும், 20 செ.மீ., விட்டத்திலும், பக்கவாட்டில் 60 செ.மீ., விட்டத்திலும் பள்ளி வாகனம் என சின்னம் வரைய வேண்டும். வாடகை ஒப்பந்த வாகனம் என்றால், "பள்ளி செல்லும் குழந்தைகளின் பணிக்கு&' என குறிப்பிட வேண்டும். முதலுதவி பெட்டி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும். பள்ளி வாகனத்தின் ஜன்னல்களில் நீளவாக்கில் இரும்பு கம்பிகள் பொருத்த வேண்டும்; தீயணைக்கும் கருவி வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தின் பக்கவாட்டு விபரத்தில் பள்ளியின் பெயரும், தொலைபேசி எண்ணும் குறிப்பிட வேண்டும். வாகனத்தின் கதவுகளுக்கு பாதுகாப்பான தாழ்ப்பாள் வேண்டும். பள்ளி குழந்தைகள் பாடப்புத்தகங்களை பாதுகாப்பாக வைக்க, இருக்கையின் கீழ் வசதி ஏற்படுத்த வேண்டும். பள்ளி சார்பில் வாகன காப்பாளர் ஒருவர் உடன் பயணிக்க வேண்டும். பெற்றோரோ அல்லது ஆசிரியரோ பள்ளி வாகனத்தில் பயணித்து, பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தை ஓட்டுபவர் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற பாதுகாப்பு விதிகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு, போக்குவரத்து விழிப்புணர்வு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்