சிறந்த பள்ளிக்கு ‘கிரேடு’; மோசமான பள்ளிக்கு ‘பரேடு’
கோவை: செயல்வழிக் கற்றல் கல்வி திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிகளுக்கு ‘கிரேடு’, பரிசு வழங்கி கவுரவிக்கவும், மோசமாக செயல்படுவதாக ஆய்வில் கண்டறியப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல்(ஏ.பி.எல்) கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களை மையமாகக் கொண்டுள்ள இந்த புதிய கல்வி முறை, படைப்பாற்றலை தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி முறையை செயல்படுத்துவதில் பிற மாவட்டங்களை விட கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களின் இந்த சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கவும், ஊக்கப்படுத்தவும், சிறந்த பள்ளிகளுக்கு பரிசு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பற்றி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறியதாவது:ஏ.பி.எல்., கல்வி முறையின் அடைவு நிலை அறிய, பள்ளிவாரியாக ஆய்வு நடத்தப்படுகிறது. மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்புகளில் படிக்கும் எத்தனை மாணவர்கள், பாடவாரியாக படிநிலையில் தேறியுள்ளனர் என நடத்தப்பட்ட ஆய்வில், பல மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிநிலையை விட அதிக அடைவு நிலையை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள்தான் இந்த சாதனைக்கு காரணம். நான்காம் வகுப்பு மாணவனின் ஆங்கில கையெழுத்து, சி.பி.எஸ்.இ., பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனைப் போல் எந்தவித எழுத்துப் பிழையும் இல்லாமல் உள்ளது. 16 உண்டு உறைவிடப் பள்ளிகள், 141 இணைப்பு மையங்கள் வாயிலாக பள்ளிகளின் இடைநிற்றல் சதவீதத்தை குறைப்பதிலும் கோவை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனையை தக்க வைத்து ஊக்குவிக்க, ஏ.பி.எல்., கல்வி முறையை சிறந்த முறையில் கற்பித்த பள்ளிகளுக்கு ஏ.பி.சி.டி. என ஒன்றியம் வாரியாக ‘கிரேடு’ வழங்கவுள்ளோம். பள்ளிகளின் அடைவு நிலையின் அடிப்படையில் 22 ஒன்றியங்களில் சிறந்த பள்ளி தேர்வு செய்யப்படவுள்ளது. சிறந்த பள்ளிகளை கொண்ட கிராம கல்விக் குழுவுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கவுள்ளோம். இதைத் தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள பள்ளிகளில் உதவி கல்வி அலுவலர், கண்காணிப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் மாதம் ஒருமுறை நேரடி ஆய்வு நடத்தவுள்ளனர். இதன்பின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கூட்டத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். கல்வித் துறை இயக்குனர்களுக்கு நகல் அனுப்பி வைக்கப்படும். அறிக்கையின்படி மோசமான அடைவு நிலை உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, காளியப்பன் கூறினார்.