நிலைமையை சரிசெய்ய சிறப்பு நிதி: துணைவேந்தர் கவுரி
சென்னை: சென்னை பல்கலையில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை போக்க, தமிழக அரசிடம் சிறப்பு நிதி கேட்டுள்ளோம் என சென்னை பல்கலை துணை வேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம் 2010ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. தேர்வாகும் மாணவர்கள், பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் இலவசமாக இளநிலை பட்டப் படிப்பு படிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் இந்த திட்டத்தின்கீழ் தேர்வான 218 மாணவர்களுக்கு சென்னை பல்கலை துணை வேந்தர் கவுரி நேற்று ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி அறிவுரை வழங்கினார்.பின் அவர் அளித்த பேட்டி:சென்னை பல்கலையில் நிதி பற்றாக்குறை உள்ளது. தொலைதுார கல்வியில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசிடம் சிறப்பு நிதி கேட்டுள்ளோம். ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்திற்கு, யு.ஜி.சி., அனுமதி வழங்கியுள்ளது. வரும் டிசம்பர் முதல் சென்னை பல்கலை வாயிலாக ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும். பி.எட்.,டும் நடத்தப்படும்.இவ்வாறு கவுரி கூறினார்.