ரம்பூட்டான் பழம் சாகுபடியில் அசத்தும் ஓய்வு தலைமையாசிரியர்
மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கூடயத்தூரில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜூ 68, மருத்துவகுணம் கொண்ட ரம்பூட்டான் பழம் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.இடுக்கி மாவட்டத்தில் ரம்பூட்டான் பழம் சாகுபடியில் ஒரு சிலர் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கூடயத்தூரில் ராஜூ ஆறு ஏக்கரில் ரம்பூட்டான் பழம் சாகுபடி செய்கிறார்.சில ஆண்டுகளுக்கு முன் அருகில் வசிக்கும் சோமன் என்பவர் ரம்பூட்டான் நாற்று ஒன்றை வழங்கியுள்ளார். அதனை வீட்டு முற்றத்தில் நட்டு வளர்த்தவருக்கு பலன் கிடைத்தது. மரம் முழுவதும் பழம் காய்த்ததால் அதனை வர்த்தக நோக்கத்தில் சாகுபடி செய்ய முடிவு செய்தார். தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் ரப்பர் தோட்டம் ரம்பூட்டான் பழம் தோட்டமாக மாற்றினார். மூன்று ஆண்டுகள் தோட்டத்தை பராமரித்தவருக்கு நான்காம் ஆண்டு முதல் நல்ல பலன் கிடைக்க துவங்கியது. 2013ல் பணி ஓய்வு பெற்றதும் முழு நேரம் விவசாயத்தில் ஈடுபட்டார். மேலும் நான்கு ஏக்கரில் ரம்பூட்டான் சாகுபடி செய்தார். மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட என். 18ம் வகை நாற்றுகளை நட்டு சாணத்தை மட்டும் உரமாக பயன்படுத்தினார். தற்போது சீசன் என்பதால் மரங்களில் பழம் காய்த்து குலுங்குகின்றது. ஒரு மரத்தில் 120 கிலோ வரை காய்க்கும். கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதலாக கொண்டு செல்லப்படுகிறது. பறவைகள், அணில் ஆகியவற்றிடம் இருந்து பழங்களை பாதுகாக்க மரத்தை வலைகளால் மூடி வைத்துள்ளார். அவை பல நிறங்களில் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.