எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இலவச ‘கேட்’ பயிற்சி
இதுமட்டுமின்றி, பயிற்சி காலத்தின் போது மாத ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. திருச்சியில் புதியதாக அமைய உள்ள ஐ.ஐ.எம்., உட்பட நாடு முழுவதிலும் 2 ஆயிரம் இடங்கள் வரும் ஆண்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, சுமார் 450 இடங்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்காக ஒதுக்கப்படுகிறது. ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’ (கேட்) தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே இந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரும் ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற வேண்டும் என்ற நோக்கில் ஐ.எம்.எஸ்., மற்றும் தாட்கோ இணைந்து இலவச பயிற்சி அளிக்க உள்ளது. இதுகுறித்து ஐ.எம்.எஸ்., பயிற்சி நிறுவன சென்னை கிளை துணை பொது மேலாளர் சரித் நாயர் கூறியதாவது: பொதுவாக, ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்ற ஆர்வம் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்களிடம், அதிலும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரிடையே மிகக் குறைந்த அளவிலேயே இக்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வேட்கை உள்ளது. எனினும், வடமாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் உள்ள இப்பிரிவு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். பிற பிரிவினர் ‘கேட்’ தேர்வில் 99 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 95 சதவீதத்திற்கு மேல் எடுத்தாலே வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். தற்போது சாதரணமாக 85 முதல் 90 சதவீத மதிப்பெண் பெறும் தமிழகத்தில் உள்ள இப்பிரிவினரை பயிற்சியின் மூலம் எளிதில் 95 சதவீத மதிப்பெண் பெறச் செய்ய முடியும். இதன்படி, ‘கேட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சியை ஐ.எம்.எஸ்., தனியார் கல்வி நிறுவனமும், தமிழக அரசின் தாட்கோவும் இணைந்து இலவசமாக வழங்குகின்றன. வரும் நவம்பர் வரை அளிக்கப்பட உள்ள இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.500 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதன்மூலம், நாட்டிலேயே மேலாண்மைக் கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) உட்பட பிரபல கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்பு படிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியும். மேலும், ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கப் பெறாமல் போகும் இப்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக, எக்ஸ்.ஏ.டி., எப்.எம்.எஸ்., டான்சாட் போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். இவற்றின்மூலம், நாட்டின் பிரதான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் ‘சீட்’ கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது. இவ்வாறு சரித் நாயர் கூறினார். எழுத்துத்தேர்வு மூலம் இந்த இலவசப் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் தலா 60 சதவீதமும், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். தற்போது இரண்டாம் ஆண்டு கலை அறிவியல் பட்டப்படிப்பு அல்லது மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியரும் தேர்வில் பங்கேற்கலாம். எழுத்துத்தேர்வு ஜன. 17ம் தேதி நடைபெற உள்ளது. ஜன. 13ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வு நாளின்போது, கல்வி மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்று, வருமானச் சான்று, ரேஷன் கார்டு, 5 போட்டோ ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும். சென்னை உட்பட பல்வேறு மையங்களில் இதற்கான தேர்வு நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கும், எழுத்துத் தேர்வுக்கு பதிவு செய்துகொள்வதற்கும் 044 - 2819 3075, 2819 4322 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.