படிப்பு முடிக்கும் போதே பயிற்று மொழி சான்றிதழ்?
சென்னை: பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போதே, பயிற்று மொழி சான்றிதழை சேர்த்து வழங்குமாறு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ் வழியில் படித்தோருக்கு, அரசு துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில், 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்காக, விண்ணப்பதாரர்கள் தாங்கள் படித்த கல்வி தகுதியுடன், எந்தெந்த வகுப்புகளில் தமிழ் வழியில் படித்தனர் என்பதற்கான, பயிற்று மொழி சான்றிதழ் வழங்க வேண்டும். பட்டப் படிப்பு முடித்தோர், இந்தியாவிலும், மற்ற வெளிநாடுகளிலும் பணியில் சேர, தங்களின் பட்டப் படிப்பு சான்றிதழுடன், பயிற்று மொழி சான்றிதழை இணைத்து வழங்க வேண்டும். இதனால், தமிழகத்தில் அரசு துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போரும், வெளிநாட்டு வேலைக்கு செல்வோரும், பயிற்று மொழி சான்றிதழ்களை, தனியாக விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளது.குறிப்பிட்ட கால அவகாசத்தில் சான்றிதழ் பெற முடியாமல், பலர் தங்களுக்கான வேலைவாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, பயிற்று மொழி சான்றிதழுக்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படாமல் தவிர்க்க, படிப்பு முடிக்கும் போதே, பயிற்று மொழி சான்றிதழை இணைத்து வழங்க, பள்ளிக்கல்வி துறையும், உயர்கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.