பேச்சு தோல்வி அரசு ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, டி.என்.எஸ்.இ., ஜாக்டோ சார்பில், நாளை டி.பி.ஐ., வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.போராட்டத்தை கைவிடுமாறு, பள்ளிக்கல்வி துறை சார்பில், இயக்குனர் அறிவொளி தலைமையிலான அதிகாரிகள் குழு, நேற்று கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியது. சங்க நிர்வாகிகள் மாயவன், சங்கர், பேட்ரிக் ரைமண்ட், ஆரோக்கியதாஸ், சங்கரபெருமாள், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.இது குறித்து, அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். இதையடுத்து, கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரமாகும். நாளை ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனக்கூறி, ஆசிரியர் சங்கத்தினர் கூட்டத்தை முடித்துக் கொண்டனர். இந்த போராட்டத்தில், பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பும் பங்கேற்கும் என, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிவித்து உள்ளார்.