நீட் டாப்பர்ஸ் பட்டியலில் கோவை பின்தங்குவது ஏன்?
கோவை: மருத்துவ படிப்புகளுக்கான, மாநில தரவரிசை பட்டியலில், முதல் பத்து இடங்களில், கோவை மாணவி ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அரசுப்பள்ளிகளுக்கான இடஒதுக்கீட்டு, ரேங்க் பட்டியலிலும், கோவை மாணவர்கள் முன்னிலை பெறாதது, கல்வியாளர்கள் மத்தியில், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.தமிழக மருத்துவ கல்லுாரிகளில் சேர, மாநில தரவரிசை பட்டியல், கடந்த 16ம் தேதி, வெளியிடப்பட்டது. இதில், கோவையை சேர்ந்த மாணவி சஞ்சனா நாகமலை, 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று, நான்காமிடம் பிடித்துள்ளார். முதல் பத்து மதிப்பெண்களில், சென்னையில் இருந்து மூவர், சேலத்தில் இருந்து இருவர் இடம்பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ், 363 அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகள் உள்ளன. இதுதவிர, 80க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், சென்னையை அடுத்து, அதிக தனியார் கல்வி நிறுவனங்கள், அரசுப்பள்ளிகள் கொண்ட முக்கிய கல்வி மையமாக திகழும் கோவை மாவட்டத்தில் இருந்து, தேசிய அளவில், முதல் 50 ரேங்க்கில், ஒருவர் கூட இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.மருத்துவம் மட்டுமே படிப்பல்லமாநிலம் முழுக்க, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ்2 பொதுத்தேர்வை ஆண்டுதோறும் எதிர்கொள்கின்றனர். ஆனால், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும், மாநில அளவிலான மருத்துவ இடங்கள், 13,625 மட்டுமே. இதற்கு நடப்பாண்டில், 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; மூன்று மடங்கு போட்டி இருக்கிறது. இதனால், அதிக தொகை செலவிட்டு, பயிற்சி பெற்று, மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக மட்டுமே காத்திருந்து, படிக்கும் மனநிலை, கோவை மாணவர்களிடம் மாறியிருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவம் தவிர, பொறியியல், சட்டம், வேளாண்மை, மேலாண்மை, கலை, அறிவியல் என, பரந்துபட்ட துறை சார்ந்த படிப்புகள் குறித்த விழிப்புணர்வு, அதிகரித்திருப்பதும் முக்கிய காரணமாகும்.பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதி, மத்திய, மாநில கல்லுாரிகளில் சேரலாம் என்ற விழிப்புணர்வும் உள்ளதால், அதிக போட்டிகள் நிறைந்த, மருத்துவ படிப்புகளுக்கு, கோவை மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம் என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழில் மையமாக கோவை உள்ளதால், வேலைவாய்ப்பு தரும் பிற படிப்புகள் மீது, மாணவர்களின் கவனம் திரும்பி இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதிகரிக்கும் ரெசிடென்சியல் சென்டர்கள்அலன் பயிற்சி மையத்தின் அகாடமிக் தலைவர் சவுரப் திவாரி கூறுகையில், ஒன்பதாம் வகுப்பில் இருந்தே, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், முதல் முயற்சியிலே வெற்றி பெறுகின்றனர். ஆனால், கோவை மாவட்டத்தில், முன்கூட்டியே கோச்சிங் சேருவோரை விட, ரிப்பீட்டர்ஸ் எனப்படும், மறுமுறை தேர்வு எழுத, சென்டர்களை தேடி வருவோர் தான் அதிகம். மருத்துவ துறையின் முக்கியத்துவம் அறிந்து படிப்போர் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.கவனச்சிதறல்கள் இல்லா மலும், விடாமுயற்சியோடும் படிக்க வேண்டுமென்ற எண்ணம் குறைவதாக தோன்றுகிறது. இதற்கு, பிற துறை படிப்புகள் குறித்த விழிப்புணர்வு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நாமக்கல் போல, கோவையிலும் ரெசிடென்சியல் வசதியுடன் கூடிய கோச்சிங் சென்டர்கள் அதிகரித்து வருவதால், இனிவரும் காலங்களில், நீட் தேர்வுக்கான போட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.நுழைவுத்தேர்வு விழிப்புணர்வுகோவையில் தனியார் பள்ளிகள் அதிகம். இங்கு படிக்க வைக்கும் பெரும்பாலான பெற்றோர், கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். மாணவர்களுக்கும் உயர்கல்வி குறித்த புரிதல் உள்ளது. எங்கள் பள்ளியில், கடந்த இரு ஆண்டுகளாக, மாநில ரேங்க் பட்டியலில், மாணவர்கள் இடம்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், நீட் பயிற்சிக்காக தயாராகும், மாணவர்களின் விகிதம் அதிகரிப்பதை காண முடிகிறது. கோவையிலும் இந்த சராசரி சதவீதம் அதிகரித்து தான் இருக்கிறது. நீட் தாண்டி மற்ற நுழைவுத்தேர்வுகள் எழுதினாலும், தேசிய, மாநில கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்ற விழிப்புணர்வு, மாணவர்கள் மத்தியில் உள்ளது என சுகுணா கல்வி குழுமம் தாளாளர் மற்றும் தலைவர், சுகுணா லட்சுமிநாராயணசுவாமி கூறினார்.மாணவர்கள் மனநிலையில் மாற்றம்கோவை மாவட்டத்தில் மருத்துவம் போலவே, பிற துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்த, விழிப்புணர்வு அதிகம் உள்ளது. பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, வணிகவியல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள படிப்புகளில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். குறைந்த சீட்கள் கொண்ட மருத்துவ படிப்புகளுக்காக, அதிக தொகையும், காலத்தையும் விரயம் செய்து, கோச்சிங் செல்ல வேண்டுமா என்ற எண்ணம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இருப்பதை அறிய முடிகிறது. சந்தையில் அதிகம் பேசப்படும் துறைகள் சார்ந்த படிப்புகள் மீது, மாணவர்களின் கவனம் திரும்புகிறது. மற்ற மாவட்டங்களை விட, கோவை மாணவர்கள், எந்த துறையை எந்த கல்லுாரியில் தேர்வு செய்தால், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படைப் புரிதலுடன் இருக்கிறார்கள், என எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் அறங்காவலர், மோகன்தாஸ் கூறினார்.