சரிந்த கற்றல் திறனை நிமிர்த்த கையேடு திட்டம்
கோவை: கொரோனாவுக்குப் பின், சிந்தித்து விடையளிக்கும் பகுதிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் பின்தங்கியிருப்பதால், அதை மேம்படுத்த சிறப்பு கையேடு தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றால், தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, இரு கல்வியாண்டு முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அடிப்படை கற்றல் திறன் இல்லாமலேயே மாணவர்கள், உயர் தொடக்க வகுப்புகளாக கருதப்படும் ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்கள் மற்ற பாடங்களை விட, கணிதத்தில் மிகவும் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக எளிய கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன்களே இல்லாமல் மாணவர்கள் உயர் வகுப்புகளுக்கு வந்துள்ளதால், கணிதத்திறனில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அடிப்படை கற்றல் திறன் பரிசோதிக்க நடத்தப்பட்ட தேர்வுகளிலும், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதை ஈடுகட்டவும், கணிதத்தை எளிமையாக புரிய வைக்கவும், சிறப்பு கையேடு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மை கருத்தாளர்கள் சிலர் கூறுகையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன், 2017ல் நடத்தப்பட்ட தேர்வுகளோடு, கடந்தாண்டு தேர்வை ஒப்பிட்ட போது, தேர்ச்சி சதவீதம் பாதிக்கு பாதி சரிந்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் நடைமுறையில் இருப்பதால், வேறு வழியின்றி அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சியடைய செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் கற்றல் இடைவெளியை சரிகட்ட, உயர் தொடக்க வகுப்புகளிலேயே, அடிப்படை கணிதத்திறனை மேம்படுத்த, சிறப்பு கையேடு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், இக்கையேடு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி, மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.