சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் தேர்வு: கோவை மாணவி முதலிடம்
கோவை: தேசிய அளவில் நடத்தப்பட்ட சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்(சி.ஏ), தேர்வில் கோவை மாணவி அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். பிளஸ் 2, பி.காம்., படித்து முடிக்கும் மாணவர்கள் மத்தியில் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பு படிக்கும் ஆர்வம் பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆடிட்டர் வேலைக்கும் மவுசு ஏற்பட்டுள்ளதே காரணம். ஆடிட்டர் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் இதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இத்தேர்வில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் அசோசியேஷன் மையத்தில் பயிற்சி பெற்ற மாணவி பிரஜிதா(21), இந்திய அளவில் அதிக மதிப்பெண்(533 மதிப்பெண்) பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது தந்தை ஆடிட்டர் பாலவினோதன். இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவி பிரஜிதாவுக்கு, ஆடிட்டர்ஸ் அசோதியேஷன் கோவை மைய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அசோசியேஷன் தலைவர் காமேஷ் கூறுகையில், “சாதாரணமாக இத்தேர்வில் 400 மதிப்பெண் பெறுவது சிரமம். ஆனால் 533 மதிப்பெண் பெற்றுள்ளது சாதனை. இந்திய அளவில் சுமார் 3,000 மாணவர்கள் இத்தேர்வு எழுதினர். கோவையில் உள்ள எங்கள் சங்கத்தின் சார்பில் 200 மாணவர்கள்(பழைய முறை, புதிய முறை சேர்த்து) தேர்வு எழுதினர். இதில் புதிய முறைப்படி தேர்வு எழுதிய பிரஜிதா, அதிக மதிப்பெண் பெற்று கோவைக்கே பெருமை தேடி தந்துள்ளார்,” என்றார்.