குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மலைகிராம மக்களுக்கு அறிவுரை
ஓசூர்: தளி ஒன்றியம், அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய பஞ்.,க்களில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்து வரும், 18.08 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். அப்போது, நுாருந்துசாமி மலை கிராமத்தில் வசிக்கும் மழைவாழ் மக்கள் குடியிருப்புகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பழங்குடியின மக்கள் மத்தியில் மாவட்ட கலெக்டர் சரயு பேசுகையில், குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மணவ, மாணவியர், விடுதிகளில் சேர்ந்து பயன் பெறலாம். குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு போதிய மருத்துவ வசதி, தடுப்பூசி ஆகியவற்றை உரிய காலத்தில் செலுத்தி கொள்ள வேண்டும், என்றார்.நுாருந்துசாமி மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், அன்னியாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், பள்ளி மாணவ மாணவியரின் வாசிப்பு மற்றும் கல்வி திறனை கேட்டறிந்தார். ஆய்வின் போது, உதவி திட்ட அலுவலர் தேவராஜ், உதவி செயற்பொறியாளர் மாது, பி.டி.ஓ.,,க்கள் பாலாஜி, சுபாராணி உட்பட பலர் உடனிருந்தனர்.