தரமற்ற உணவு தருவதாக விடுதி மாணவர்கள் மறியல்
திருச்சி: திருச்சி, கிராப்பட்டியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கான அரசு விடுதியில், கலை அறிவியல் கல்லுாரி மற்றும் மருத்துவ கல்லுாரிகளில் பயிலும், 120 மாணவர்கள் தங்கியுள்ளனர்.மூன்று மாதங்களுக்கு மேலாக, விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். மாணவர்கள், விடுதி வார்டன், துறை அதிகாரிகள் மற்றும் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று காலை, விடுதி மாணவர்கள், 20க்கும் மேற்பட்டோர், காலை உணவான இட்லி தரம் இல்லாமல் இருப்பதாக கூறி, இட்லியை அண்டாவில் எடுத்து வந்து, கிராப்பட்டி மேம்பாலத்தில் வைத்து, மறியலில் ஈடுபட்டனர்.எடமலைப்பட்டி போலீசார், மாணவர்களுடன் பேச்சு நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, தரமான உணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் உறுதி அளித்தனர். இதனால், மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.