ஏழு லட்சம் நூல்கள் சேகரித்த சென்னைப் பல்கலைக்கழகம்
இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:சென்னை கோட்டூர்புரத்தில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை நூற்றாண்டு விழா நூலகத்திற்கு’ நூல்களை அளிக்கும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைக் கல்லூரிகளின் மாணவர்களைக் கொண்டு கடந்த 26ம் தேதி, குடியரசு தினம் முதல், ‘படித்ததை பிறருக்கு படிக்க கொடுப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் புத்தகங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் இதுவரை ஏழு லட்சம் புத்தகங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதற்காக, தமிழக கவர்னர் தமது சொந்த தொகுப்பில் இருந்து 100 புத்தகங்களைக் கொடுத்தார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் மற்றும் கண்ணதாசன் பதிப்பகத்தின் பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோரும் நூல்களை தந்துள்ளனர். தமிழக முதல்வரையும் சந்தித்து நூல்கள் பெற உள்ளோம். இத்திட்டதின் மூலம் ஜன. 31ம் தேதி வரை நூல்கள் பெறப்படும். பிறகு நூல்கள் தரம் பிரித்து எடுக்கப்பட்டு, தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு திருவாசகம் கூறினார்.