குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை: கலெக்டர்
நாமக்கல்: மாவட்டத்தில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர், நாமக்கல் உட்கோட்ட பகுதிகளில், தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தலைமையில், தொழிலாளர் துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.அப்போது, தனியார் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில், 18 வயது நிறைவடையாத, ஒரு இளம் பெண் தொழிலாளியும், டயர் ஒர்க்ஸ் நிறுவனம் ஒன்றில், 18 வயது நிறைவடையாத, ஒரு இளம் ஆண் தொழிலாளியும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கனவே நடத்தப்பட்ட இதுபோன்ற ஆய்வின்போது, குழந்தை தொழிலாளரை பணியமர்த்திய பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நாமக்கல், தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதில், கடந்த 5 ஆண்டுகளில், மொத்தம், 21 வழக்குகளுக்கு, 4.36 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நிறுவனங்கள், குற்றங்களை ஒப்புக்கொண்டு, மாவட்ட கலெக்டரால், மொத்தம், 1.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.எந்தவொரு நிறுவனமும், குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணியில் ஈடுபடுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் எச்சரித்துள்ளார்.