உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு: கல்வியறிவு இல்லாததே காரணம்

தர்மபுரி: போதிய விழிப்புணர்வு, படிப்பறிவில்லாத பெற்றோரால் தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தர்மபுரி மாவட்டம், ஏரியூரில், 16 வயதில் திருமணம் நடந்து, கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னைக்கு போலீஸ் படி ஏறிய சிறுமியை, ஏரியூர் எஸ்.எஸ்.ஐ., சகாதேவன், 55, ஆசைவார்த்தை கூறி, சிறுமியுடன் குடித்தனம் நடத்தியுள்ளார்.இது தொடர்பாக, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதத்திடம், தன்னை கர்ப்பமாக்கி சகாதேவன் ஏமாற்றியதாக சிறுமி அளித்த புகாரில், பென்னாகரம் மகளிர் போலீசார் போக்சோவில் சகாதேவனை கைது செய்தனர். இதில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 1.5 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த மாவட்டத்தின் ஏரியூர், பென்னாகரம், பாலக்கோடு, ஏ.கே.தாண்டா சுற்றுப்புற பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் படிப்பறிவும், விழிப்புணர்வும் குறைவாக உள்ளது. இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு. தொழில் வாய்ப்பு இல்லாத நேரங்களில், வெளியூர் வேலைக்கு செல்கின்றனர். அப்போது, வீட்டில் உள்ள பெரியவர்களின் பொறுப்பில் பெண் குழந்தைகளை ஒப்படைக்கின்றனர்.அவர்கள், சிறு வயதில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் அல்லது உரிய கண்காணிப்பு இல்லாத சிறுமியர் நோட்டமிடப்பட்டு, சமூக விரோத கும்பலால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இதில், பாதிக்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்தால், அங்கு பெயரளவிற்கு தான் நடவடிக்கை. ஏரியூர் சம்பவம் போல, காவல் துறையில் உள்ள சில சமூக விரோதிகளிடம் சிக்கி தங்கள் வாழ்க்கையை சிறுமியர் இழக்கின்றனர். இதில் சில சம்பவங்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன. பல சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன.மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் குழந்தை திருமணங்கள் குறையவில்லை. சிறுமியருக்கு கல்வியறிவு எவ்வளவு அவசியம் என்பதை, படிப்பறிவு இல்லாத பெற்றோருக்கு உணர்த்த வேண்டும். சிறு வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.தர்மபுரி மாவட்ட தொழிலாளர்கள் தங்கள் பெண் குழந்தைகளை விட்டு வெளியூர் மற்றும் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்க, மாவட்டத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இவற்றை எல்லாம் தமிழக அரசு செய்தால் மட்டுமே, தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.8 மாதங்களில் 77 புகார்கள்தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு, 110க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தொடர்பான அழைப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளன. பெரும்பாலான திருமணங்கள் உண்மை என்பதை அறிந்து அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதில், 13க்கும் மேற்பட்ட சிறுமியர் திருமணத்திற்கு பின் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, 77 க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் குறித்து அழைப்புகள் வந்துள்ளன. அந்த திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.தகவல் வந்து நிறுத்தப்படும் குழந்தை திருமணங்கள் மட்டுமே இவ்வளவு என்றால், ரகசியமாக நிறைய திருமணங்கள் நடக்கின்றன. குழந்தையை திருமணம் செய்பவர் மீது பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்து போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை முடித்துக் கொள்வதால், மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்