ஒழுக்கமே உண்மையான கல்வி ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல்
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்யசாய் உயர் கல்வி மையத்தின் 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், 503 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 21 பேருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:இந்தப் பல்கலையின் நிறுவன வேந்தரான பகவான் சத்ய சாய் பாபாவின், 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.உண்மையையே பேசுவோம், உண்மையின் பாதையிலேயே நடப்போம் என்ற இந்த பல்கலையின் கோட்பாடு, மாணவர்களுக்கு பெரும் உத்வேகமாக இருக்கும். நவீன குருகுலம் என்று இந்தப் பல்கலையை அழைக்கின்றனர். இங்கு பாடங்களுடன், ஒழுக்க நெறிகளும், கலாசாரம், நம் பாரம்பரியம் கற்றுத் தரப்படுவது பாராட்டுக்குரியது.ஒடிசாவில் ஸ்ரீ அரபிந்தர் ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் நான் பணியாற்றியது நினைவுக்கு வருகிறது. வாழ்க்கையின் நன்னெறிகள் மற்றும் ஒழுக்கத்தை கற்றுத் தருவதே உண்மையான கல்வியாகும். ஒரு கட்டடத்துக்கு அடிக்கல் மிகவும் முக்கியம். அதுபோல, மிகவும் வலுவான வாழ்க்கையை மாணவர்களுக்கு அளிப்பதற்கு, இவை சிறந்த அடிக்கல்லாகும்.இங்கு மாணவர்களுக்கு பாடங்களுடன், ஒழுக்க நெறிகள், ஆன்மிக பண்புகள் கற்றுத் தரப்படுகின்றன. வெறும் கல்வி அறிவு மட்டும் அளிக்காமல், மனித மாண்புகளை பாதுகாக்கும் கல்வி அளிக்கப்படுவது பாராட்டுக்குரியது. இங்கு சிறந்த பண்புகளை கற்கும் மாணவர்கள், தங்களுடைய வாழ்க்கையில் அதை மற்றவர்களுக்கும் பரப்புவர். இவ்வாறு அவர் பேசினார்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி மையத்தின் பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவருக்கு தங்கப்பதக்கத்தை வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு. உடன், ஆந்திர கவர்னர் அப்துல் நசீர், ஆந்திர அரசின் பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் உஷா ஸ்ரீசரண் மற்றும் பல்கலை நிர்வாகிகள்.