மருத்துவ கல்வி இயக்குனர் நியமனத்தை எதிர்த்து வழக்கு
சென்னை: தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சங்குமணி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு, சுகாதாரத்துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தாக்கல் செய்த, கோ வாரண்டோ மனு விபரம்:மருத்துவ கல்வி இயக்குனர் பதவி என்பது, மாநிலத்தில் உள்ள, 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், இரு அரசு பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் உள்பட, 150 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் நிர்வாகம், மருத்துவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் முக்கியமான பணி.பணி மூப்பு உள்ளிட்ட எந்த விதிகளும் இல்லாமல், மருத்துவ கல்வி இயக்குனராக சங்குமணியை, நவம்பர், 14ல் நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது, இயற்கை நீதி, அரசு ஊழியர் சேவை, நிபந்தனைகள் சட்டத்துக்கு எதிரானது. மதுரை மருத்துவ கல்லுாரி முதல்வராக, சங்குமணி பணிபுரிந்த போது, கூடுதல் விலைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.முறைகேடு புகார்களில் சிக்கிய நபர்களை, தேர்வு குழுவில் பரிந்துரைக்க வேண்டாம் என, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தங்கள்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக, மருத்துவ கல்லுாரி இயக்குனராக சங்குமணி தொடர்ந்து செயல்பட தகுதியில்லை என அறிவித்து, அவர் செயல்பட தடை விதிப்பதோடு, அவரை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். அப்போது, இந்த மனு குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலர் மற்றும் டாக்டர் சங்குமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, ஜனவரிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.