புகையில்லா போகி மாணவ மாணவியர் விழிப்புணர்வு பேரணி
ஆவடி: புகையில்லாத போகி என்ற தலைப்பில், மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று காலை ஆவடியில் நடந்தது. பேரணியை, ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் அன்பழகன், தனியார் அறக்கட்டளையின் தலைவர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.ஆவடி பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணி, ஆவடி செக்போஸ்ட்டில் முடிந்தது. இதில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2000 மாணவ மாணவியர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகையை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதையடுத்து, மாணவ மாணவியர் ஒன்றிணைந்து புகை இல்லாத போகி பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், போலீசார் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.