பெரியார் பல்கலையின் தற்போதைய நிர்வாகத்தை அகற்ற வலியுறுத்தல்
ஓமலுார்: பெரியார் பல்கலையின் தற்போதைய நிர்வாகத்தை அகற்றக்கோரி, தமிழக உயர் கல்வித்துறைக்கு, தமிழ்நாடு பல்கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாலமுருகன் நேற்று, உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்:சேலம் பெரியார் பல்கலையில் தற்போதைய துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தினரால் நிகழ்த்தப்பெற்று வருவது தொடர் விதிமீறல் என்பதால், அந்த நிர்வாகத்தை அகற்ற, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கைதாகி நிபந்தனை ஜாமினில் உள்ள துணைவேந்தர், அலுவலக பணியை மேற்கொள்கிறார் என்பதும், அரசியலமைப்பு பதவியில் உள்ள கவர்னர், குற்றச்சாட்டுக்கு ஆளான துணைவேந்தரின் கரங்களை பலப்படுத்தும் முயற்சியாக, பல்கலை வரலாற்றில் இதுவரை நடக்காத சிறப்பு வருகை என, சங்கம் கருதுகிறது.தலைமறைவாக உள்ள கணினி அறிவியல் துறைத்தலைவர் மற்றும் முன்னாள் பதிவாளர் தங்கவேல், இரு கூட்டாளிகள் சேர்ந்து, அப்டெக்கான் போரம் தொடங்கி, இயக்குனர்களாக உள்ளனர். பெரியார் பல்கலை விதிப்படி எந்த பணியாளரும் தனிநபர் தொழில் அல்லது வணிகம் செய்யக்கூடாது என்பதை மீறி, தங்கவேல் அரசு சாரா நிறுவன இயக்குனராக இருந்து வருவதை, சங்கம் ஏற்கனவே கண்டித்து இருந்தது.இந்நிலையில், 2023 நவ., 16ல், அந்த தனியார் நிறுவனத்தை பதிவு செய்து அந்நிறுவன இயக்குனர்கள், 3 பேரில் ஒருவராக பதிவு செய்த தங்கவேல், பூட்டர் பவுண்டேஷன் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைக்கு ஆளானதும், &'அப்டெக்கான் போரம்&' நிறுவன இயக்குனர் பட்டியலில் இருந்து அவர் பெயரை நீக்கியுள்ளார். 2023 நவ., 16ல் இணைய தளத்தில் இடம்பெற்ற தங்கவேல் பெயர், டிச., 5ல் நீக்கப்பட்டது. இதுகுறித்து இணைய தள புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தங்கவேல் உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும்.