உள்ளூர் செய்திகள்

முதல்வர் திறந்தும் பூட்டியே கிடக்கும் பள்ளி கட்டடம்!

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முதல்வர் திறந்து வைத்து ஒரு மாதமாகியும் அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பள்ளி கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடக்கிறது.இவ்வொன்றியத்தில் வகுத்தெழுவன்பட்டி ஊராட்சி செருதப்பட்டி துவக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு கடந்தாண்டு இடிக்கப்பட்டது.அப்பள்ளி மாணவர்களுக்கு பக்கத்து கிராமமான அனியம்பட்டி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக வகுப்பு நடக்கிறது. இந்நிலையில் இடிக்கப்பட்ட இடத்தில் ரூ. 28 லட்சம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது. கடந்தாண்டு டிச.26ல் காணொளி காட்சி மூலம் முதல்வர் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.ஆனால் அங்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கழிப்பறை, தண்ணீர், காம்பவுண்ட் சுவர் வசதி இல்லாததால் கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அனியம்பட்டி உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே இப்பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடக்கிறது.ஏற்கனவே பள்ளிக்கட்டடம் இல்லாத நிலையில் ஒரு கி.மீ., துாரம் மாணவர்கள் நடந்து சென்று அலைச்சலுக்கு உள்ளாகி பாடம் படித்து வந்த மாணவர்கள் தற்போது புதிய கட்டடம் வந்தும் அவர்களின் நிலை இன்னும் மாறவில்லை.இதனால் தேத்திபட்டி, செருதபட்டி, புதூர் உள்ளிட்ட பகுதி மாணவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே விரைந்து செருதப்பட்டி பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பள்ளியை திறக்க பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்