கலெக்டர் முன் வார்டன் நடத்திய நாடகம்... அம்பலம்!
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதியில், இரவு நேரங்களில் மாணவர்கள் யாரும் தங்காத நிலையில், கலெக்டர் ஆய்வு செய்ய வந்த நாளில் மட்டும் மாணவர்களை தங்க வைத்து, நடத்திய வார்டனின் நாடகம் அம்பலமானது.தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் மூலம், நேற்று முன்தினம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், பெரிஞ்சேரி ரேஷன் கடை, பேரிட்டிவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பெரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளி, பி.டி.ஓ., அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.இரவு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் நலவிடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்கள் வரிசையாக அமர வைத்து பாடம் படித்து கொண்டு இருந்தனர்.இதைப் பார்த்த கலெக்டர் பிரபுசங்கர், தினமும் இப்படி நடக்கிறதா அல்லது நான் வந்ததால் இப்படியா என கேள்வி எழுப்பினார். தினமும் இதுபோல் நடப்பதாக வார்டன் மோகன் கூறினார்.மாணவர்களிடம் பாடம் குறித்து கேள்வி கேட்டார். பதில் சொல்லாமல் மாணவர்கள் விழித்தனர். பின்னர் அவர்கள் தங்கும் அறையை ஆய்வு செய்தார். அங்கு பழைய காலத்து டிரங்க் பெட்டி மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.அதில் துணிகள் எதுவும் இல்லை. தொடர்ந்து எத்தனை மாணவர்கள் இங்கு உள்ளனர் என கலெக்டர் கேட்டார். மொத்தம், 88 மாணவர்கள் உள்ளதாக வார்டன் கூறினார்.ஆனால் அவர்கள் தங்குவதற்கான சாத்திமே அங்கு இல்லை. மாணவர்களின் துணிகள் எதுவும் அங்கு இல்லை. மேலும் சமையல் செய்வதற்கான காய்கறி, அரிசி, பருப்பு போன்றவை இருப்பில் இல்லை.இதனால் சந்தேகம் அடைந்த கலெக்டர் மாணவர்களிடம் விவரங்கள் கேட்டார். அவர்கள் பதில் எதுவும் கூறாமல், அமைதியாக இருந்தனர்.மாணவர்கள் தங்கும் அறையில் பழுதடைந்த டிவி இருந்தது. இதை ஏன் இங்கு வைத்துள்ளீர்கள் என கேட்டதற்கு பழுது பார்க்க வேண்டும் என வார்டன் கூறினார். கலெக்டர் கேட்ட கேள்விகளுக்கு வார்டன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.இதனால் மாவட்ட கலெக்டர் கடும் அதிருப்தி அடைந்தார். மாணவர்கள் இல்லாத நிலையில், மாணவர்கள் தங்குவது போல் நடத்திய நாடகம் அம்பலமானதால், இனி திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காலை, 7:00 மணி மதியம் உணவு உண்ணும் நேரம், இரவு மாணவர்கள் துாங்கும் நேரம் என, விடுதி மாணவர்களுடன் வார்டன் அல்லது சமையலர் யாராவது ஒருவர் போட்டோ எடுத்து துறை சம்பந்தமான உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.அமைச்சர் ஆய்விலும் அதிர்ச்சிஇதே விடுதியில் கடந்தாண்டு மார்ச் 16ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தபோது, மாணவர்கள் இல்லாத நிலையில் சாப்பாடு, குழம்பு மட்டும் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கேட்டதற்கு மதியம் செய்த சாப்பாட்டை மாணவர்கள் சாப்பிட்டு விட்டு மீதி உள்ளது என சமையலர் கூறினார். பின்னர் அறைகளை ஆய்வு செய்ய சென்றபோது, பூட்டு போடப்பட்டு இருந்தது.இதுகுறித்து விசாரித்ததில், மாணவர்கள் இல்லாத நிலையில், அமைச்சர் வருவதை அறிந்து ஹோட்டலில் வாங்கி வந்து கணக்கு காண்பித்தது தெரிந்தது. தற்போது மீண்டும் அதே நிலை தொடர்ந்துள்ளது.திருவள்ளூர் அடுத்த மேல்மணம்பேடு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கடந்தாண்டு, ஆக., 30ம் தேதி, அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு செய்தபோது, 66 மாணவர்கள் தங்கி படிப்பதாக வருகைப் பதிவேடுகளில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், மாணவர்கள் தங்குவதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது. வருகைப் பதிவேட்டில் இருந்த மாணவர் ஒருவரின் அலைபேசியை தொடர்பு கொண்டபோது, அவர் தனியார் பள்ளியில் படிப்பதாகக் கூறியுள்ளார். பள்ளி மாணவர்கள் விடுதியில் இதே நிலை தொடர்வதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.