உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் புத்தக கண்காட்சி நாளை கடைசி நாள்

சிவகங்கை: புத்தகங்கள் மனிதர்களை அறிவாற்றல் மிக்க சமூகமாக மாற்றக் கூடியது என்று பல அறிஞர், கவிஞர்கள் கூற்றுப்படியே சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை வாசகர்கள் ஆர்வமுடன் பார்த்து, புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.தலை குனிந்து என்னை வாசித்தால் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைப்பேன் என்கிறது புத்தகம். வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் நாம் குளிப்பது, சாப்பிடுவது போல குழந்தையின் வாசிப்பு கருவறையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.குழந்தை கருவறையில் இருக்கும் போதே தாய் நல்ல நுால்களை வாசிப்பதன் மூலம் குழந்தையின் மூளை விருத்தி அடைகிறது என்கின்றனர் அறிஞர்கள்.நான்கு மாத குழந்தையை டி.வி., முன் அமர்த்தினால், வாசிப்புத் திறன் குறைவதற்கு நாமே அடிக்கல் நாட்டுகிறோம்.மாறாக பூக்கள், பறவைகள், விலங்குகள், நிறைந்த புத்தகத்தை புரட்ட கற்றுக் கொடுங்கள் வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும். வாசிப்பு என்பது குழந்தைகளின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஒரு ஆயுதம்.எதிர்கால வெற்றிக்குரிய ஒரு திறவுகோல்.எழுத்தாற்றல் குறைந்த பிள்ளைகள் பற்றிய ஆய்வில் அவர்களுடைய வாசிப்பு திறன் குறைவாக இருந்தது தான் என கண்டறிந்துள்ளனர். ஒரு நுாலகம் திறக்கப்படும்போது 10 சிறை சாலைகள் மூடப்படுகின்றன என்றார் காந்தி. நுால் பல கல் என்றார் அவ்வையார்.கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக என்றார் வள்ளுவர். காலம் என்னும் ஆழ்கடலில் நீந்தி அறிவு என்னும் துறைமுகத்தை அடைய கலங்கரை விளக்கமாய் விளங்குவது நுால்களே என்றார் தாகூர்.சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் ஜன.27 முதல் பிப்.6 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை புத்தக கண்காட்சி மற்றும் திருவிழா நடக்கிறது. இங்கு 110 ஸ்டால்களில் 10 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம். மாலை 6:00 மணிக்கு மேல் தினமும் சிறப்பு பேச்சாளர்கள் பேச்சு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.பாபாசியுடன் மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறையினர் இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்