சிறப்பாசிரியருக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வலியுறுத்தல்
திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் மாதச் சம்பளம் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் 11 யூனியன்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகளில் தொகுப்பூதியத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறன் மேம்படுத்தவும், அவர்களுக்கு மனம் மற்றும் உடல் ரீதியான சிறப்பு வகுப்புகளை எடுப்பதற்கும் 52 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு கடந்த ஜனவரி மாத சம்பளம் ரூ.25 ஆயிரம் இதுவரை வழங்கவில்லை. இதனால் வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே குறைகளை நிவர்த்தி செய்து உரிய மாதத்திற்கான சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்கிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என சிறப்பாசிரியர்கள் கூறினர்.