காங்., மாநாட்டுக்கு பஸ்கள் தேர்வு; மாணவர்கள் பரிதவிப்பு
ராம்நகர்: காங்கிரஸ் மாநாட்டுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் அனுப்பப்பட்டதால், பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத சென்ற மாணவர்கள், பஸ் கிடைக்காமல் பரிதவித்தனர்.கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ், பல்வேறு இடங்களில் மாநாடு, பொதுக் கூட்டம் நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலுக்காக துமகூரின், குனிகல்லில் காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது.இந்த மாநாட்டுக்கு மக்களை அழைத்து வர, மாண்டியா, ராம்நகர், துமகூரு உட்பட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களை அரசு ஏற்பாடு செய்திருந்தது. ராம்நகர் பணிமனையில் இருந்து, அதிக எண்ணிக்கையில் பஸ்கள் மாநாட்டுக்கு அனுப்பப்பட்டன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு மார்ச் 1ல் துவங்கியது. தேர்வு மையங்களுக்குச் செல்ல, பஸ் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்பட்டனர். தேர்வு துவங்குவது தெரிந்தும், காங்கிரஸ் மாநாட்டுக்கு பஸ்களை அனுப்பிய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மீது, மாணவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.