உள்ளூர் செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதன் முறையாக, கேரளாவில் 80,000 பள்ளி ஆசிரியர்களுக்கு, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மூன்று நாட்கள்இங்கு, எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 80,000 ஆசிரியர்களை மேம்படுத்தும் நோக்கில், 'கைட்' எனப்படும், கேரள உட்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்ப அமைப்பால், மே 2 முதல் மூன்று நாட்களுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இது குறித்து, கைட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கேரளாவில் மொத்தம் 80,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொகுதி தொகுதியாக இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளன. ஒரு தொகுதியில் அதிகபட்சம் 25 ஆசிரியர்கள் இருப்பர்.இந்த பயிற்சியில், மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களை ஆசிரியர்கள் பயன்படுத்துவர். இதற்காக அவர்களுக்கு பிரத்யேக இ - மெயில் கணக்குகள் அளிக்கப்படும்.இந்த ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சியில், பி.டி.எப்.,கள், படங்கள், வீடியோக்களில் சிக்கலான ஆவணங்களை எளிமையாக்குவதற்கும், முக்கியமான தகவல்களை தக்கவைத்து, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும், ஆசிரியர்களுக்கு கற்றுத் தரப்படும்.பாடம் சார்ந்த காட்சிகளை உருவாக்குவது; திருத்துவது; அவற்றை கார்ட்டூன்கள் அல்லது ஓவியங்களாக மாற்றுவது; படங்களுடன் உரையை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் கற்றுக் கொள்வர்.கற்றல் திறன்வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்களை உருவாக்குதல், விளக்கக்காட்சிகள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்க, ஏ.ஐ., தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதும் குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கப்படும்.மேலும், டீப் பேக் குறித்தும் அவர்களுக்கு புரிதல் ஏற்படுத்தப்படும். இந்த ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சி, ஆசிரியர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கவும் உதவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்